ஆஸ்திரேலியாவில் செப்டெம்பர் மாத பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ள நிலையில், அடுத்த வாரம் வட்டி வீதம் உயர்த்தப்படுவதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலிய புள்ளிவிபரப் பணியகத்தின் (ABS) தகவலின்படி, நுகர்வோர் விலைச் சுட்டெண் (CPI) ஆகஸ்ட் மாதத்தில் 0.4 சதவீதமாகக் காணப்பட்ட நிலையில், செப்டெம்பர் மாதத்தில் 0.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, வருடாந்த பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 4 சதவீதமாக இருந்த நிலையில், செப்டெம்பரில் 4.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
“செப்டெம்பர் மாத வருடாந்த பணவீக்க அதிகரிப்புக்கு வீடமைப்புத் துறையே மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. இத்துறையில் 5.2 சதவீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது” என அவுஸ்திரேலிய புள்ளிவிபரப் பணியகத்தின் விலைப் புள்ளிவிபரப் பிரிவின் தலைவர் ரேச்சல் மெக்ரிக்கிக் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்துத் துறையிலும் பணவீக்கம் உயர்ந்துள்ளது. செப்டெம்பர் மாதத்தில் எரிபொருள் விலைகள் 9.4 சதவீதத்தால் அதிகரித்துள்ளன.
அதேவேளை, அடிப்படைப் பணவீக்கத்தை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் வருடாந்த சரிசெய்யப்பட்ட சராசரி பணவீக்க விகிதம் (Trimmed Mean) செப்டெம்பர் மாதத்தில் 3.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்கான இந்த விகிதம் திருத்தப்பட்டு 3.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலைகள் அவற்றின் ஏற்ற இறக்கத் தன்மை காரணமாக சரிசெய்யப்பட்ட சராசரி பணவீக்கக் கணக்கீட்டிலிருந்து விலக்கப்பட்டிருந்த போதிலும், அடிப்படைப் பணவீக்கம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பணவீக்கத் தரவுகள் வெளியானதைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் வட்டி வீதம் உயர்த்தப்படுவதற்கான சந்தை எதிர்பார்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. அடுத்த வாரம் வட்டி வீதம் 0.25 சதவீதப் புள்ளிகளால் உயர்த்தப்படுவதற்கான சாத்தியம் சுமார் 85 சதவீதமாக இருப்பதாக புளூம்பெர்க் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டில் ஐந்தாவது முறையாக வட்டி வீதம் உயர்த்தப்படலாம்
KPMG ஆஸ்திரேலியாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் பிரெண்டன் ரைன், வெளியிடப்பட்ட பணவீக்கத் தரவுகளை, இந்த ஆண்டில் ஐந்தாவது முறையாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பணவீக்க வட்டி வீதத்தை உயர்த்துவதற்கு அவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கிக்குத் தேவையான இறுதித் தரவாகக் குறிப்பிட்டுள்ளார்.
“ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தில் விலை அழுத்தங்கள் குறைவதற்குப் பதிலாக அதிகரித்து வருகின்றன என்பது தெளிவாகிறது. பணவீக்கத்தின் இந்த அதிகரிப்பு சந்தை எதிர்பார்ப்புகளைத் தாண்டியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் இன்னமும் அதிகமாகவே உள்ளது – மத்திய வங்கி
பணவீக்கத் தரவுகள் வெளியிடப்பட்ட அதேவேளையில், அவுஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் செனட் மதிப்பீட்டு விசாரணையில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர், பணவீக்கம் வங்கியின் எதிர்பார்ப்புகளுடன் பொதுவாக ஒத்துப்போவதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், பணவீக்க அளவு இன்னமும் அதிகமாகவே இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
“பணவீக்கம் அதிகமாக இருப்பதாக நாம் தொடர்ந்து கூறி வந்துள்ளோம். இன்றும் அதனையே கூறுவோம் என்பதில் சந்தேகமில்லை” என அவர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை 2 முதல் 3 சதவீதத்திற்குள் பேணுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
கடந்த வாரம் கருத்துத் தெரிவித்திருந்த துணை ஆளுநர் ஹவுசர், பணவீக்கத்திற்கான எதிர்காலக் கணிப்புகள் வங்கி முன்னதாக மதிப்பிட்டதை விடக் கணிசமாக மோசமடைந்துள்ளதாக எச்சரித்திருந்தார். இதனால், அடுத்த வாரம் மீண்டும் வட்டி வீதம் உயர்த்தப்படுவதற்கான சாத்தியம் அதிகரித்திருந்தது.
“இன்றைய தரவுகள், அடுத்த வாரம் வட்டி வீதத்தை உயர்த்துவதற்கான காரணத்தை வழங்கும். அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் குறைவதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படாவிட்டால், 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் வட்டி வீதம் உயர்த்தப்படுவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது” என பிரெண்டன் ரைன் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் வட்டி வீதத்தைத் தீர்மானிக்கும் சபையின் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதற்கான தீர்மானம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் அறிவிக்கப்படவுள்ளது.
இதனுடன், பணவீக்கம் உள்ளிட்ட முக்கிய பொருளாதாரக் குறியீடுகள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட எதிர்காலக் கணிப்புகளையும் ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ளது.