ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் உள் மேற்கு பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 88 வயதுடைய பெண் உட்பட நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 17 வயது சிறுவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் அப்பொட்ஸ்ஃபோர்ட் பகுதியில் உள்ள வீடொன்று தீப்பற்றி எரிவதாகக் கிடைத்த தகவலையடுத்து, 40 தீயணைப்பு வீரர்களும் 10 தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
இதன்போது, 88 வயதுடைய பெண், அவரது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் வீட்டிலிருந்து மீட்கப்பட்டு, புகையைச் சுவாசித்ததால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதேவேளை, ஏணியின் உதவியுடன் வீட்டிலிருந்த வயோதிபப் பெண்ணைக் காப்பாற்ற முயன்ற 49 வயதுடைய ஆணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
குறித்த வீட்டில் நீண்டகாலமாக வாடகைக்குத் தங்கியிருந்த மற்றுமொரு ஆணுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
17 வயது சிறுவன் கைது
இந்தச் சம்பவம் தொடர்பில், செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் மெரிலண்ட்ஸ் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது கைகள் மற்றும் கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், முதலில் மருத்துவச் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் நீதிமன்ற அனுமதியுடன் சோதனை நடவடிக்கை முன்னெடுத்த துப்பறியும் பொலிஸார், விசாரணைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
தீ அல்லது வெடிப்பின் மூலம் 15,000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், உரிமையாளரின் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட வாகனத்தில் பயணித்தமை மற்றும் மோசடியான முறையில் சொத்துக்களைப் பெற்றமை ஆகிய குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ள சிறுவன், புதன்கிழமை பரமட்டா பிணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.