இஸ்ரேல் தேர்தலில் வெளிநாட்டுத் தலையீடு இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, இந்த விவகாரத்துக்காக ஒட்டுமொத்த அரபு சமூகத்தையும் குற்றம்சாட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் சந்தேகங்கள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஹெர்சோக் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தில் தேர்தல்களின் நேர்மை மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்ட அவர், வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தி ஜனநாயகத்தில் பங்கேற்ற ஒட்டுமொத்த அரபு சமூகத்தையும் இவ்விவகாரத்தில் களங்கப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான தரப்பினர், அரபுக் கட்சிகளுக்குச் சாதகமாக வெளிநாட்டுத் தலையீடும் தேர்தல் முறைகேடுகளும் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இந்த விவகாரம் அந்நாட்டு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஹெர்சோக் வலியுறுத்தியுள்ளார்.