விக்டோரியா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வார இறுதியில் இடம்பெற்ற தொடர் வீதி விபத்துகளில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் மூவர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இரண்டு தனித்தனி விபத்துகளில் 25 மற்றும் 21 வயதுடைய இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளனர்.
சனிக்கிழமை இடம்பெற்ற விபத்துகளில் 75 வயதுடைய பெண் ஒருவர் பாதசாரிகள் கடவையில் வாகனத்தால் மோதப்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும், பிளேர்கோரி பகுதியில் மோட்டார் சைக்கிள் மரமொன்றுடன் மோதியதில் 26 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, மேரிபரோ பகுதியில் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் 47 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெரிபீ பகுதியில் வாகனமொன்று மரத்துடன் மோதியதில் அதன் சாரதியும் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துகளில் படுகாயமடைந்த நால்வரும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை விக்டோரியா மாநில வீதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 227 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 20 உயிரிழப்புகள் குறைவான எண்ணிக்கை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சனிக்கிழமை ஜீலொங் அருகே மின்சார மிதிவண்டியும் காரும் மோதிய விபத்தில் 17 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மற்றொரு சிறுவனும் காயமடைந்துள்ளார்.