ஆஸ்திரேலியாவின் கன்பரா நகரின் தெற்குப் பகுதியில் உள்ள பாடசாலையொன்றுக்கு வெளியே இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் மாணவர் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
Lake Tuggeranong College பாடசாலைக்கு அருகிலுள்ள வாகனத் தரிப்பிடத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சமூகத்தைச் சேர்ந்த சிலர் கத்தியுடன் பாடசாலைக்கு அருகிலுள்ள வாகனத் தரிப்பிடத்துக்கு வந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்ததாக, பாடசாலை நிர்வாகம் பெற்றோருக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது.
காயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துக்குப் பாடசாலை ஊழியர்கள் உடனடியாகப் பதிலளித்ததாகவும், காயமடைந்த மாணவர் தற்போது நலமாக இருப்பதுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் பாடசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸார் பாடசாலைக்குச் சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இச்சம்பவம் மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும் என்பதால், தேவைப்படும் மாணவர்களுக்கு உளநல ஆதரவு வழங்கப்படும் என்றும் பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் Crime Stoppers ஊடாகத் தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனியுரிமை காரணங்களைக் கருத்திற்கொண்டு மேலதிக விபரங்களை வெளியிட முடியாது எனப் பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.