ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரானின் சில இலக்குகள் மீது அமெரிக்கா தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இராணுவ இலக்குகள் மீது ஈரான் படையினர் வான் பாதுகாப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் அசோசியேட்டட் பிரஸ்ஸுக்கு (AP) தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஈரானின் கெஷ்ம் தீவில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானின் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இந்தத் தாக்குதல்கள் முழுமையான இராணுவ மோதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதைக் குறிக்கவில்லை என்றும், வரையறுக்கப்பட்ட அளவிலான தற்காப்பு நடவடிக்கைகளாகவே அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் முக்கியமான இடைக்காலத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. தேர்தலுக்கு முன்னர் ஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்தப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈரானுடனான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் மூலம் உடன்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈரானுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வொன்றை எட்டுவதற்கான முயற்சிகள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், ஈரான் மீதான புதிய தாக்குதல்களை முன்னெடுக்குமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ட்ரம்ப் நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், மத்திய கிழக்கில் போர் மீண்டும் தீவிரமடைந்தால் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் வர்த்தகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என வளைகுடா நாடுகள் எச்சரித்துள்ளன.
குறிப்பாக, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றம் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், ஈரான் போருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் வகையில் கட்டார் மத்தியஸ்தத்தில் இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.