விக்டோரியா மாநிலத்தில், வன் நேஷன் (One Nation) கட்சியின் தொண்டர் ஒருவர் மீது பேஸ்பால் மட்டையால் தாக்குதல் நடத்தப்பட்டதில், அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
60 வயதான குறித்த நபரின் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது வைத்தியசாலையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிலோங் (Geelong) நகருக்கு அருகிலுள்ள டோர்கே (Torquay) பகுதியில், ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரின் வீட்டுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த ஒன் நேஷன் கட்சியின் விளம்பரப் பலகைகளை இருவர் சேதப்படுத்தியதாகக் கூறப்படும் நிலையில், அதனைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, இரவு சுமார் 7.45 மணியளவில் ஸ்கோர்பியோ வீதியிலுள்ள வீட்டுக்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஜிலோங் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது காயங்கள் பாரதூரமானவையாக இருந்தாலும், உயிருக்கு ஆபத்தானவை அல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது நிலையான உடல்நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் 37 வயதுடைய ஆண் ஒருவரும், 14 வயதுடைய சிறுவன் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
37 வயதுடைய நபர் வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
14 வயதுடைய சிறுவனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், தாக்குதலுக்குள்ளான நபரை வன் நேஷன் கட்சியின் தலைவர் பொலின் ஹான்சன் செவ்வாய்க்கிழமை காலை வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட நபரின் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அது அதிகரிக்கிறதா என்பது தொடர்பில் மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது முகம் உள்ளிட்ட உடற்பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவம் தன்னைப் பெரிதும் பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும், தமக்கு விருப்பமான அரசியல் கட்சிக்கு ஆதரவளிப்பதற்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளதாகத் தெரிவித்த விக்டோரியா மாநில முதல்வர் பென் கரோல், இத்தகைய தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனக் கண்டித்துள்ளார்.
விக்டோரியா எதிர்க்கட்சித் தலைவர் ஜெஸ் வில்சனும் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட நபர் விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வன்முறை ஒருபோதும் தீர்வாகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான நபர் சுயதொழில் புரிபவர் என்றும், மனைவி மற்றும் பிள்ளைகளைக் கொண்ட குடும்பஸ்தர் என்றும் பொலின் ஹான்சன் தெரிவித்துள்ளார். அவர் மயக்கமடைந்து கிடந்தபோது அவரது வாகனமும் சேதப்படுத்தப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்திலும் பிரிஸ்பேனில் நடைபெற்ற எக்கா விழாவில் ஒன் நேஷன் கட்சியின் ஆடை அணிந்திருந்த கட்சி ஊழியர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி விலா எலும்பு முறிவுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
விக்டோரியா மாநிலத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தொழிலாளர் கட்சி, கூட்டணி மற்றும் ஒன் நேஷன் ஆகிய கட்சிகளுக்கு இடையில் மும்முனைப் போட்டி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.