தெற்கு அவுஸ்திரேலிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ட்ராய் பெல், பாரிய மோசடி மற்றும் திருட்டுக் குற்றங்களுக்காக ஏற்கனவே சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில், நாடாளுமன்றப் பயணக் கொடுப்பனவை முறைகேடாகப் பயன்படுத்தி 20,000 ஆஸ்திரேலிய டொலர்களுக்கும் அதிகமான தொகையைப் பெற்றுக்கொண்ட குற்றத்தையும் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.
இன்று அடிலெய்ட் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காணொளி இணைப்பு ஊடாக, சிறைச்சாலையிலிருந்து முன்னிலையான ட்ராய் பெல், மோசடி தொடர்பான 15 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.
அவர் மீது முன்னதாக மேலும் 37 மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த போதிலும், அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் அவற்றைக் கைவிட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில், 'Country Members Accommodation Allowance' எனப்படும் கிராமப்புற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தங்குமிடக் கொடுப்பனவை முறைகேடாகப் பயன்படுத்தி, 21,177 அவுஸ்திரேலிய டொலர்களை அவர் பெற்றுக்கொண்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் கொடுப்பனவைத் தான் முறைகேடாகப் பயன்படுத்தவில்லை என ட்ராய் பெல் முன்னதாகத் திட்டவட்டமாக மறுத்திருந்தார்.
53 வயதான ட்ராய் பெல், 2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கல்வித் திணைக்களத்தில் பணியாற்றியபோது, இலாப நோக்கற்ற கல்வி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பொதுநிதியில் 430,000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கும் அதிகமான தொகையைத் திருடிய குற்றச்சாட்டில், கடந்த ஆண்டு மாவட்ட நீதிமன்ற நடுவர் குழுவினால் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீடு தோல்வியடைந்ததை அடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.
பின்னர், இரண்டு மாதங்களின் பின்னர் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், இரண்டரை ஆண்டுகள் பிணையில் விடுவிக்க முடியாத காலப்பகுதியாகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், பயணக் கொடுப்பனவு முறைகேடு தொடர்பான வழக்கில் தண்டனைத் தீர்மானிப்பதற்கு முந்தைய விசாரணைக்காக ட்ராய் பெல் அடுத்த மாதம் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.