அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளது. குடியரசுக் கட்சியின் கோட்டைகளாகக் கருதப்பட்ட பல மாநிலங்களிலும் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்துக்கு எதிராகப் பெருமளவிலான வாக்காளர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜனநாயகக் கட்சியின் வெற்றியின் அளவும் தாக்கமும் தொடர்ந்து வெளிப்பட்டு வரும் நிலையில், தென் கரோலினா, டெக்சாஸ் மற்றும் அயோவா உள்ளிட்ட குடியரசுக் கட்சியின் வலுவான ஆதரவுத் தளங்களாகக் கருதப்பட்ட மாநிலங்களிலும் அக்கட்சி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ட்ரம்பின் பொருளாதார நிர்வாகம் மற்றும் கடந்த பெப்ரவரி மாதம் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கிய அவரது தீர்மானம் ஆகியவற்றின் மீதான மக்களின் கடும் அதிருப்தியே இந்தத் தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
ஈரானுடனான போரினால் எரிபொருள் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்த கவலையும், இந்தப் பிரச்சினையை ட்ரம்ப் கையாளும் விதம் தொடர்பான அதிருப்தியும் கருத்துக் கணிப்புகளில் தொடர்ந்து வெளிப்பட்டிருந்தன.
கன்சாஸில் வரலாற்றுச் சாதனை
கன்சாஸ் மாநிலத்தில் மெகா தேவாலயத்தின் போதகரான ஆடம் ஹமில்டன் வெற்றி பெற்று செனட் உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார். சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்தநிலைக்குப் பின்னர், கன்சாஸில் செனட் ஆசனமொன்றை வென்ற முதல் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
ஒஹியோ மாநிலத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸுக்குச் சொந்தமான செனட் ஆசனத்தை ஜனநாயகக் கட்சியின் ஷெரட் பிரவுன் கைப்பற்றியுள்ளார்.
டெக்சாஸ் மாநிலத்தில் ஜனநாயகக் கட்சியின் மாநிலப் பிரதிநிதி ஜேம்ஸ் தலாரிகோ, குடியரசுக் கட்சியின் சர்ச்சைகளில் சிக்கியிருந்த சட்டமா அதிபர் கென் பாக்ஸ்டனைத் தோற்கடித்துள்ளார். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்புக்கு இரட்டை இலக்க வாக்கு வித்தியாசத்தில் ஆதரவளித்த மாநிலங்களாக ஒஹியோவும் டெக்சாஸும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
2024ஆம் ஆண்டு தேர்தலில் ட்ரம்புக்கு சுமார் 18 சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஆதரவளித்த தென் கரோலினா மாநிலத்திலும் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அங்கு குழந்தைகள் நல மருத்துவரான அன்னி ஆண்ட்ரூஸ், குடியரசுக் கட்சியின் செனட்டர் டார்லின் கிரஹாமைத் தோற்கடித்துள்ளார்.
செனட்டர் லிண்ட்சே கிரஹாம் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது ஆசனத்துக்கு டார்லின் கிரஹாம் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆறு செனட் ஆசனங்களைப் பறித்த ஜனநாயகக் கட்சி
ஒட்டுமொத்தமாகக் குடியரசுக் கட்சியிடமிருந்து ஆறு செனட் ஆசனங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.
மிச்சிகன் மற்றும் மினசோட்டா மாநிலங்களில் தங்களுக்குச் சொந்தமான ஆசனங்களைத் தக்கவைத்துக் கொள்ளத் தவறினாலும், செனட் சபையில் பெரும்பான்மையை உறுதிப்படுத்தும் அளவுக்கு ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அதேவேளை, அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையிலும் ஜனநாயகக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் நிலையை எட்டியுள்ளது. கென்டக்கி, நியூஜெர்சி மற்றும் வட கரோலினா உள்ளிட்ட மாநிலங்களில் குடியரசுக் கட்சியிடமிருந்து குறைந்தது எட்டு ஆசனங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.
குடியரசுக் கட்சியின் வலுவான ஆதரவுத் தளங்களாகக் கருதப்படும் தேர்தல் மாவட்டங்களிலும் ஜனநாயகக் கட்சி குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றுள்ளது.
ஆளுநர் தேர்தல்களிலும் ஜனநாயகக் கட்சிக்கு வெற்றி
மாநில அளவிலான தேர்தல்களிலும் ஜனநாயகக் கட்சியின் வெற்றி தொடர்ந்துள்ளது.
டெக்சாஸ் மாநிலத்தில் தொடர்ந்து மூன்று முறை ஆளுநராகப் பதவி வகித்த குடியரசுக் கட்சியின் கிரெக் அபோட் தோல்வியடைந்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் ஜினா ஹினோஜோசா வெற்றி பெற்றுள்ளார்.
மேலும், குடியரசுக் கட்சியின் ஆதிக்கம் காணப்படும் அயோவா மற்றும் ஒஹியோ மாநிலங்களிலும் ஜனநாயகக் கட்சி ஆளுநர் பதவிகளைக் கைப்பற்றியுள்ளது.