ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியமான டார்வினுக்கும் சீனாவின் குவாங்சோ நகருக்கும் இடையிலான நேரடி விமான சேவையை சீனா சதர்ன் எயார்லைன்ஸ் நிறுவனம் இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த நேரடி விமான சேவை, ஓராண்டு நிறைவடைவதற்கு முன்னரே முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளது. இதன்படி, டார்வினிலிருந்து குவாங்சோவுக்கான இறுதி விமானம் எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி பயணத்தை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு பிராந்தியத்துக்கும் சீனாவுக்கும் இடையில் நேரடியாகப் பயணிகள் போக்குவரத்தை முன்னெடுத்த ஒரே விமான சேவையாக இது காணப்பட்டது. அத்துடன், டார்வினிலிருந்து இயக்கப்பட்ட சர்வதேச விமானப் பாதைகளில் மிக நீண்ட தூரத்தைக் கொண்டதாகவும் இந்தச் சேவை அமைந்திருந்தது.
இந்த விமான சேவையை இடைநிறுத்துவதற்கான தீர்மானம் சீனா சதர்ன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் வர்த்தக ரீதியான முடிவு என டார்வின் சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்கும் ஏர்போர்ட் டெவலப்மென்ட் குழுமத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானம் ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், விமானப் பாதைகள் மற்றும் சேவை அட்டவணைகள் தொடர்பான முடிவுகளை விமான நிறுவனங்களே வர்த்தக அடிப்படையில் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், சிங்கப்பூர், இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள டென்பசார் மற்றும் கிழக்குத் திமோர் தலைநகர் டிலி உள்ளிட்ட விமானப் போக்குவரத்து மையங்கள் ஊடாக டார்வினிலிருந்து சீனா உள்ளிட்ட சர்வதேச இடங்களுக்குப் பயணிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டார்வினிலிருந்து முன்னெடுக்கப்பட்ட சர்வதேச விமான சேவைகள் குறுகிய காலத்திலேயே இடைநிறுத்தப்படும் தொடர் சம்பவங்களில் இதுவும் ஒன்றாகியுள்ளது.
2025ஆம் ஆண்டு குவாண்டாஸ் நிறுவனம் டார்வின் – சிங்கப்பூர் நேரடி விமான சேவையை ஆரம்பித்ததுடன், ஏர் ஏசியா நிறுவனம் டார்வினிலிருந்து பாலி மற்றும் கோலாலம்பூருக்கான விமான சேவைகளையும் தொடங்கியிருந்தது. எனினும், 2026 ஜூன் மாதத்திற்குள் குவாண்டாஸ் நிறுவனம் தனது சிங்கப்பூர் சேவையை சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் காலப்பகுதிக்கு மாத்திரம் மட்டுப்படுத்தியதுடன், ஏர் ஏசியா நிறுவனம் டார்வினிலிருந்து தனது சேவைகளை முழுமையாக நிறுத்தியது.
இதற்கிடையில், டார்வின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புதிய சர்வதேச விமானப் பாதைகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட டார்வின் – குவாங்சோ விமான சேவை, இரு நகரங்களுக்கும் இடையில் ஆண்டுதோறும் 52,000 பயணிகளுக்கான இருக்கை வசதிகளை வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் மூலம் சுற்றுலாத்துறைக்கு பெரும் ஊக்கம் கிடைக்கும் எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
சீனச் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் நோக்கில், கடந்த ஏப்ரல் மாதம் வடக்கு பிராந்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மேரி-கிளேர் பூத்பி தலைமையிலான குழுவினர் குவாங்சோவுக்குச் சென்று சுற்றுலா முகவர்களுடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியிருந்தனர்.
எனினும், இந்த விமான சேவை நிறுத்தப்படுவது சுற்றுலாத்துறைக்கு மாத்திரமன்றி, வடக்கு பிராந்தியத்தின் ஏனைய வர்த்தகத் துறைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என வடக்கு பிராந்திய வர்த்தக சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி க்ளென் ஹிங்லி தெரிவித்துள்ளார்.
விமான நிறுவனங்கள் புதிய சேவைகளை ஆரம்பிக்கும்போது பயணிகள் போக்குவரத்தை மாத்திரமன்றி, சரக்குப் போக்குவரத்துக்கான வாய்ப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வடக்கு பிராந்தியத்தின் குறைந்த மக்கள் தொகை காரணமாக விமான சேவைகளைப் பொருளாதார ரீதியில் நிலைநிறுத்துவது சவாலாக உள்ளதாகவும், இதனை எதிர்கொள்ள அரசாங்கத் துறைகள், வர்த்தக அமைப்புகள் மற்றும் விமான நிலைய நிர்வாகம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாங்கத்தின் தலையீட்டுக்காகக் காத்திருப்பதில் பயனில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.