மேற்கு ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதிகள் நீண்டகாலமாக விமானிகளுக்குப் பயிற்சியளிக்கும் முக்கிய இடமாக விளங்கினாலும், விமானத்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து குறைவாகவே காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரசபையின் (CASA) சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, உரிமம் பெற்ற விமானிகளில் பெண்கள் வெறும் 8 சதவீதம் மட்டுமே உள்ளனர்.
கிம்பர்லி பிராந்தியத்தில் பணியாற்றும் பெண் விமானிகள், இத்துறையில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அவர்களின் பங்களிப்பை வெளிப்படுத்துதல், தொழில்முறை தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் தெளிவான தொழில் முன்னேற்றப் பாதைகளை உருவாக்குதல் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ஷோல் எயார் நிறுவனத்தின் புரூம் நகரைச் சேர்ந்த மூத்த விமானி கரோலின் ஜேமிசன், ஆண்களின் ஆதிக்கம் நிறைந்ததாகக் கருதப்படும் விமானத்துறையில் பெண்கள் நுழைவதால் ஏற்படும் சாதகமான மாற்றங்களைத் தாம் அதிகளவில் அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பெண் விமானிகளைப் பார்க்கும் பயணிகள், விமானத்துறையில் ஆர்வமுள்ள தமது மகள்களுக்கு ஆலோசனை பெறுவதற்காகத் தம்மைத் தொடர்புகொள்ள விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களும் விமானிகளாகப் பணியாற்ற முடியும் என்பதை நேரடியாகப் பார்ப்பதன் மூலம், இத்துறையில் தங்களாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இளம் பெண்களுக்கு ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெண் விமானிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்
விமானத்துறையில் பெண்களின் எண்ணிக்கை மெதுவாக அதிகரித்து வருகின்ற போதிலும், பாரம்பரிய பாலினப் பாகுபாடுகள் இன்னும் நீடிப்பதாக கரோலின் ஜேமிசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில சந்தர்ப்பங்களில், பெண் விமானிகளைப் பயணிகள் விமானப் பணிப்பெண்கள் எனத் தவறாக அடையாளம் காண்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விமானத்துறையில் பணியாற்றும் பெண்களிடையே பரஸ்பர ஒத்துழைப்பும் மரியாதையும் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இத்துறையில் மேலும் அதிகமான பெண்கள் இணைய வேண்டும் என ஊக்குவித்துள்ளார்.
இதேவேளை, விமானத்துறையில் பணியாற்றும் மற்றொரு பெண் விமானியான டெய்ன், பாலினத்தை ஒரு தடையாகக் கருதாமல் விமானியாக வேண்டும் என்ற ஆர்வமுள்ள இளம் பெண்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தனது குடும்ப உறுப்பினர் ஒருவர் விமானத்துறையில் பணியாற்றியதால், இத்தொழிலின் வாழ்க்கை முறையை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்முறை தொடர்புகளும் வாய்ப்புகளும் அவசியம்
அவுஸ்திரேலிய பெண் விமானிகள் சங்கத்தின் துணைத் தலைவரும் ஹெலிகொப்டர் விமானியுமான ஹிலரி வில்கின்ஸ், விமானத்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு தொழில்முறை தொடர்புகளை வலுப்படுத்துவது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
பெர்த் நகரிலிருந்து புரூம் நோக்கிப் பயணிக்கும் விமானத்தின் தலைமை விமானியாக ஒரு பெண் பணியாற்றுவதைப் பார்ப்பது, இளம் பெண்களுக்கு இத்துறையில் நுழைவதற்கான ஊக்கத்தை அளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குடும்ப வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் இடையில் சமநிலையைப் பேணுவதற்கு ஏற்ற பணிக்கொள்கைகள் உருவாக்கப்படுவதும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க உதவும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிம்பர்லி பிராந்தியத்தின் பரந்த நிலப்பரப்பைக் கருத்திற்கொள்ளும்போது, அங்கு விமானங்கள் கிட்டத்தட்ட வாடகை வாகனங்களைப் போன்று போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்பகுதியின் தொலைதூர அமைவிடம், புதிதாக விமானத்துறையில் இணைபவர்களுக்கு திறமைகளை வளர்த்துக்கொள்ளப் பெரும் வாய்ப்புகளை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, தனி விமானியாகப் பணியாற்றும் போது பயணப் பாதை, எரிபொருள் முகாமைத்துவம் மற்றும் பயணிகள் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து தீர்மானங்களையும் விமானியே மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அது எதிர்காலத்தில் பெரிய பயணிகள் விமானங்களை இயக்குவதற்கான அனுபவத்தை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், புரூம் நகரிலேயே சிறிய ஒற்றை இயந்திர விமானங்களில் ஆரம்பித்து, இரட்டை இயந்திர விமானங்கள் ஊடாகப் பெரிய பயணிகள் விமானங்களை இயக்கும் நிலைக்கு தொழில்முறையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள்
இதற்கிடையில், அவுஸ்திரேலிய விமானத்துறையில் பெண்களின் பங்களிப்பையும் தொடர்ச்சியான பணியமர்த்தலையும் அதிகரிக்கும் நோக்கில், 2019ஆம் ஆண்டு மத்திய அரசாங்கம் 'விமானத்துறையில் பெண்கள் முன்னெடுப்பு' (Women in the Aviation Industry Initiative - WAII) திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதற்காக 8 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் நிதி ஒதுக்கப்பட்டதுடன், தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில்முறை திறன் மேம்பாடு உள்ளிட்ட இலக்குகளைக் கொண்ட விசேட வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, 2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய உட்கட்டமைப்பு, போக்குவரத்து, பிராந்திய அபிவிருத்தி, தொடர்பாடல், விளையாட்டு மற்றும் கலைத்துறை அமைச்சு, 2026ஆம் ஆண்டு வரை இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மூலோபாய செயல் திட்டத்தையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.