நியூசிலாந்தின் ஆளும் மத்திய வலதுசாரி தேசியக் கட்சியும் (National Party), பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் (Labour Party) பொதுத் தேர்தலில் தலா 30 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளன. இதுவரை 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் ஆரம்ப முடிவுகளின்படி, தேசியக் கட்சி தலைமையிலான தற்போதைய மூன்று கட்சிகளைக் கொண்ட ஆளும் கூட்டணி, நாடாளுமன்றத்தில் ஒரு ஆசன வித்தியாசத்தில் மாத்திரமே பெரும்பான்மையைப் பெறும் நிலையில் உள்ளது.
பொருளாதார நெருக்கடி மற்றும் பிரதான இரு கட்சிகள் மீதான வாக்காளர்களின் அதிருப்தி ஆகியவை இந்தத் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கிடையில், மத்தியவாதக் கொள்கையைக் கொண்ட ஒப்பர்சுனிட்டி கட்சி (Opportunity Party), நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்குத் தேவையான 5 சதவீத வாக்குகளைப் பெறும் நிலையில் உள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனால், ஆட்சியமைப்பதில் அக்கட்சி தீர்மானிக்கும் சக்தியாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சனிக்கிழமை காலை 9 மணிக்கு வாக்களிப்பு நிலையங்கள் திறக்கப்பட்டு, மாலை 7 மணிக்கு மூடப்பட்டன.
தேர்தல் தினமான சனிக்கிழமை இரவு முடிவடைவதற்குள், 95 சதவீத வாக்களிப்பு நிலையங்களின் ஆரம்ப முடிவுகளை வெளியிட நியூசிலாந்து தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் நியூசிலாந்து பிரஜைகளின் வாக்குகளையும் உள்ளடக்கிய இறுதி முடிவுகள் நவம்பர் 27ஆம் திகதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டிய காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
இதற்கிடையில், எந்தவொரு பிரதான கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,
“நியூசிலாந்து மக்கள் தமது தீர்ப்பை வழங்கியுள்ளனர். ஆனால், அவர்கள் எதைத் தெரிவிக்க விரும்பினார்கள் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள எமக்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படலாம்.
அடுத்த நாடாளுமன்றத்தில் அனைத்து தரப்பினரும் விட்டுக்கொடுப்புகளைச் செய்து, ஒன்றிணைந்து செயற்பட்டு, பொதுவான இணக்கப்பாட்டை எட்ட வேண்டியிருக்கும்” எனக் குறிப்பிட்டார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு முக்கிய தேர்தல் விவகாரம்
2026ஆம் ஆண்டு நியூசிலாந்து பொதுத் தேர்தல், சில சந்தர்ப்பங்களில் 'பல்பொருள் அங்காடித் தேர்தல்' (Supermarket Election) எனவும் அழைக்கப்பட்டது.
குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பல்பொருள் அங்காடிகளுக்கு இடையிலான போட்டி மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவை அரசியல் கட்சிகளின் முக்கிய தேர்தல் பிரசாரப் பொருள்களாக அமைந்தன.
நியூசிலாந்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசியக் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி தலைமையிலான அரசாங்கங்களில் அமைச்சுப் பதவிகளை வகித்தவருமான பீட்டர் டன் (Peter Dunne), இத்தேர்தல் பெரும்பாலும் வாழ்க்கைச் செலவு தொடர்பான தேர்தலாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“நியூசிலாந்து மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைப்பதற்கு எந்த அரசியல் கூட்டணி சிறந்த நிலையில் உள்ளது என்பதையே வாக்காளர்கள் முக்கியமாகக் கருத்தில் கொண்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டார்.
ஆரம்ப தேர்தல் முடிவுகளின்படி, மத்திய இடதுசாரிக் கட்சிகளைக் காட்டிலும் ஆளும் கூட்டணி முன்னிலையில் இருப்பது ஆச்சரியமளிப்பதாக அல் ஜசீராவிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இரு தரப்புக்கும் இடையே மிக நெருக்கமான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தற்போதைய முடிவுகள் அதற்கு மாறாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசியக் கட்சி, நிதி ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து அரச வரவு செலவுத் திட்டத்தை உபரியாக மாற்றுவதுடன், தேசிய ஓய்வூதியத் திட்டத்தையும் விரிவுபடுத்துவதாக வாக்குறுதியளித்துள்ளது.
மறுபுறம், தொழிலாளர் கட்சி குறைந்த செலவில் சுகாதார சேவைகளையும் போக்குவரத்து வசதிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இரு பிரதான கட்சிகளும் கொள்கை ரீதியாக ஒன்றுக்கொன்று மிகவும் ஒத்திருக்கின்றன எனக் குறிப்பிட்ட பீட்டர் டன், அரசியலில் புதிய மாற்றங்களையும் துணிச்சலான கொள்கைகளையும் எதிர்பார்க்கும் இளம் தலைமுறை வாக்காளர்கள் மாற்றுக் கட்சிகளை நோக்கித் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன் காரணமாக பசுமைக் கட்சி (Green Party), வலதுசாரி சுதந்திரவாதக் கொள்கையைக் கொண்ட ACT New Zealand, தேசியவாதக் கொள்கைகளைக் கொண்ட New Zealand First மற்றும் புதிய மத்தியவாதக் கட்சியான Opportunity Party ஆகியவற்றுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, 5 சதவீத வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழையும் வாய்ப்பில் உள்ள ஒப்பர்சுனிட்டி கட்சி, இம்முறை தேர்தல் பிரசாரத்தில் அதிக கவனத்தை ஈர்த்த கட்சிகளில் ஒன்றாகத் திகழ்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஆட்சியமைப்பதில் தீர்மானிக்கும் சக்தியாக மாறுமா ஒப்பர்சுனிட்டி கட்சி?
நியூசிலாந்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கலப்பு உறுப்பினர் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் (Mixed-Member Proportional System) கீழ் பொதுத் தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்தலில் மக்கள் நேரடியாக நாட்டின் தலைவரைத் தெரிவு செய்வதில்லை. மாறாக, தமது தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரையும் விரும்பும் அரசியல் கட்சியையும் தெரிவு செய்து வாக்களிக்கின்றனர்.
இரு பிரதான அரசியல் கூட்டணிகளும் ஏறத்தாழ சமமான பலத்துடன் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தால், ஆட்சியமைப்பதில் ஒப்பர்சுனிட்டி கட்சியின் பங்கு முக்கியத்துவம் பெறும் என பீட்டர் டன் தெரிவித்துள்ளார்.
அக்கட்சி நாடாளுமன்றத்திற்குத் தெரிவானால், முதலில் அதிக ஆசனங்களைப் பெறும் தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
எனினும், இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக அரசியல் கட்சிகளுக்கு இடையில் பல வாரங்கள் பேச்சுவார்த்தைகள் இடம்பெறக்கூடும்.
நாடாளுமன்றம் ஜனவரி மாத ஆரம்பத்திற்குள் கூட வேண்டியுள்ளதால், நியூசிலாந்து கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்திற்குள் தெளிவான அரசாங்கமின்றி செல்லும் சாத்தியமும் காணப்படுவதாக பீட்டர் டன் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தின் நாடாளுமன்றத்தில் பொதுவாக 120 ஆசனங்கள் உள்ளன. தொகுதிகளில் வெற்றிபெறும் வேட்பாளர்கள் நேரடியாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவதுடன், தேசிய ரீதியில் கட்சிகள் பெற்றுக்கொள்ளும் வாக்குகளின் அடிப்படையில் அவற்றின் பட்டியலில் உள்ள வேட்பாளர்களுக்கும் எஞ்சிய ஆசனங்கள் வழங்கப்படுகின்றன.