ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த உணவு விநியோக ஊழியர் ஜியான் மிங் பெங்கின் (Jianming Feng) மறைவுக்கு சீன சமூகத்தினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
47 வயதான ஜியான் மிங் பெங், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மெல்பேர்ன் நகரின் மத்திய வர்த்தகப் பகுதியில் உணவு விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தனது மோட்டார் சைக்கிளை ஒருவர் சேதப்படுத்த முயற்சிப்பதைக் கண்ட அவர், மற்றொரு உணவு விநியோக ஊழியருடன் இணைந்து அந்த நபரை எதிர்கொண்டுள்ளார். இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதுடன், 51 வயதுடைய நபர் இருவரையும் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில் ஜியான் மிங் பெங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த 34 வயதுடைய மற்றைய ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 51 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
'சகோதரர் பெங்' என அன்புடன் அழைக்கப்பட்டவர்!
சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த ஜியான் மிங் ஃபெங், தனது குடும்பத்துக்கு ஆதரவளிப்பதற்காக 2017ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு வந்துள்ளார்.
கடின உழைப்பாளியான அவர், அன்பான கணவர் மற்றும் பிள்ளைகளின் மீது மிகுந்த பாசம் கொண்ட தந்தை என நண்பர்களாலும் சக ஊழியர்களாலும் நினைவுகூரப்படுகிறார்.
மெல்பேர்னின் சைனாடவுன் பகுதியில் பலருக்கும் பரிச்சயமானவராக விளங்கிய அவர், தனது வருமானத்தின் பெரும்பகுதியை சீனாவில் வசிக்கும் குடும்பத்தினருக்கு அனுப்பி வந்துள்ளார்.
தனக்காக மிகக் குறைந்தளவு பணத்தையே செலவிட்ட அவர், தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் வயதான பெற்றோரின் நலனுக்காகவே உழைத்து வந்ததாக அவருக்காக ஆரம்பிக்கப்பட்ட நிதி சேகரிப்புப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது குடும்பத்துக்கு அவசரப் பயணம், தங்குமிடம் மற்றும் இறுதிக் கிரியைகளுக்கான செலவுகளை ஈடுசெய்ய ஆரம்பிக்கப்பட்ட நிதி சேகரிப்பில் 156,000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மெல்பேர்னின் ஸ்டேட் லைப்ரரி விக்டோரியா பகுதியில் நூற்றுக்கணக்கான சீன சமூகத்தினர் ஒன்றுகூடி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர். அத்துடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி பேரணியொன்றையும் நடத்தியுள்ளனர்.
விக்டோரியா மாநில முதல்வர் பென் கரோல், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதுடன், உணவு விநியோகம் உள்ளிட்ட கிக் பொருளாதாரத் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேலதிக நடவடிக்கைகள் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் உயிரிழந்த ஊழியருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுடன், இத்தகைய பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.