ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் போதிய கவனம் பெறாமல் புறக்கணிக்கப்படுவதாக பொலிஸ் விசாரணை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சொத்துத் திருட்டு உள்ளிட்ட குறைந்த தீவிரத்தன்மை கொண்ட குற்ற விசாரணைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால், பாலியல் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் உரிய முறையில் விசாரிக்கப்படுவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2017 முதல் 2022 வரையான காலப்பகுதியில் குயின்ஸ்லாந்து பொலிஸ் சேவையில் பதிவான 19,000-க்கும் மேற்பட்ட பாலியல் குற்ற முறைப்பாடுகளை அவுஸ்திரேலிய குற்றவியல் ஆய்வு நிறுவனம் (Australian Institute of Criminology) ஆய்வு செய்துள்ளது.
இந்த ஆய்வின்படி, பதிவான முறைப்பாடுகளில் சுமார் மூன்றில் ஒரு பகுதி மீளப்பெறப்பட்டுள்ளதுடன், ஐந்தில் ஒரு பகுதி தீர்வு காணப்படாத நிலையில் உள்ளது. மேலும், சுமார் 10 சதவீத முறைப்பாடுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றில் ஒரு பங்கிற்கும் சற்றே அதிகமான முறைப்பாடுகளுக்கு மாத்திரமே தீர்வு காணப்பட்டுள்ளது.
இளைஞர் குற்றங்கள் மற்றும் சொத்துக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு நிறுவன ரீதியான மற்றும் அரசியல் முன்னுரிமை வழங்கப்படுவதே இந்த நிலைக்குக் காரணம் என விசாரணை அதிகாரிகள் ஆய்வாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை போன்ற மிகத் தீவிரமான குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய அதிகாரிகள், சிறிய திருட்டு மற்றும் மோசடி போன்ற குற்ற விசாரணைகளில் அதிக நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாலியல் குற்ற விசாரணைகள் தாமதம்
அதிக பணிச்சுமை காரணமாகப் பழைய பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாலியல் குற்ற விசாரணைகளில் பயிற்சி பெற்ற பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதுடன், பாலியல் வன்கொடுமை விசாரணைகளுக்குத் தேவையான மருத்துவ மற்றும் தடயவியல் பரிசோதனைக் கருவிகளைப் பெற்றுக்கொள்வதிலும் சிக்கல்கள் காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து பொலிஸாரின் தரவுகளின்படி, பாலியல் குற்ற முறைப்பாடுகளில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு மாத்திரமே இத்தகைய விசேட பயிற்சி பெற்ற அதிகாரிகளால் கையாளப்பட்டுள்ளது. அதேவேளை, 15 சதவீதத்திற்கும் குறைவான சம்பவங்களிலேயே பாலியல் வன்கொடுமை விசாரணைக்கான விசேட தடயவியல் பரிசோதனைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி சேவைகளுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கவலை
குயின்ஸ்லாந்து பாலியல் வன்கொடுமை வலையமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஞ்சலா லிஞ்ச், இந்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாகவும், அதேவேளை எதிர்பாராதவை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் மற்றும் நீதித்துறை கட்டமைப்பில் தங்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்ற உணர்வைக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரிடம் 40,087 பேர் பாலியல் வன்கொடுமை தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர். இது கடந்த 32 ஆண்டுகளில் பதிவான அதிகூடிய எண்ணிக்கையாகும் என அவுஸ்திரேலிய புள்ளிவிபரப் பணியகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய ஆதரவை வழங்குவதற்கும் பொலிஸ் மற்றும் விசேட உதவிச் சேவைகளுக்கான வளங்களை அதிகரிக்க வேண்டியது அவசியம் என ஏஞ்சலா லிஞ்ச் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், பாலியல் குற்ற விசாரணைகளுக்காக அதிக பயிற்சி பெற்ற அதிகாரிகளை நியமித்தல், பொலிஸ் நிலையங்களில் விசேட உதவிப் பணியாளர்களை இணைத்தல், பொலிஸ், சட்டத்தரணிகள் மற்றும் சுகாதார சேவைகளை ஒருங்கிணைக்கும் ஒரே இடத்திலான சேவை மையங்களை உருவாக்குதல் உள்ளிட்ட ஐந்து பரிந்துரைகளை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.
மேலும், மருத்துவ மற்றும் வைத்தியசாலை சேவைகளில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் தடயவியல் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பயிற்சிகளை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்குமாறு குயின்ஸ்லாந்து பொலிஸ் சேவையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.