மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பல்வேறு மென்பொருள் சேவைகள் உலகளாவிய ரீதியில் செயலிழந்ததால், அவற்றைப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) காலை கண்விழித்த பலரும் இந்தச் சேவை முடக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Outlook, Teams, Authenticator உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரச சேவைகளின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டன.
இதனையடுத்து, குறித்த கோளாறைச் சரிசெய்து சேவைகளை வழமைக்குக் கொண்டுவர மைக்ரோசொப்ட் நிறுவனம் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
மைக்ரோசொப்ட் 365 சேவைகளான Exchange Online, SharePoint, Copilot, Defender, Planner, Power BI உள்ளிட்ட பல சேவைகளையும் பயனர்களால் அணுக முடியாத நிலை ஏற்பட்டதாக நிறுவனம் உறுதிப்படுத்தியது.
ஆஸ்திரேலிய நேரப்படி காலை 9 மணிக்குப் பின்னர் மின்னஞ்சல் உள்ளிட்ட இணையவழிச் சேவைகளைப் படிப்படியாக மீளமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்தது.
எனினும், மீளமைக்கப்பட்ட சேவையகங்கள் மீண்டும் செயலிழந்ததால், சிக்கலை முழுமையாகத் தீர்ப்பதில் தாமதம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட சேவையகங்களில் பாதுகாப்பான இணைப்புகளை ஏற்படுத்தும் செயல்முறை அதிக சுமைக்கு உள்ளானதால், அவை பயனர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக மைக்ரோசொப்ட் விளக்கமளித்தது.
வணிக நடவடிக்கைகள் முடக்கம்
இந்தச் சேவை முடக்கத்தினால் அவுஸ்திரேலியாவில் பல்வேறு வணிக நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
மின்னஞ்சல் மூலம் கிடைக்கும் விற்பனை உத்தரவுகள் மற்றும் விலைப்பட்டியல்களைச் செயல்படுத்த முடியாமல் சிறு வணிகங்கள் நிதி இழப்புகளைச் சந்தித்துள்ளன.
சில சிறு வணிகங்கள் ஒரே நாளில் 30,000 அவுஸ்திரேலிய டொலர்கள் வரை இழப்பைச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிலெய்டைச் சேர்ந்த பீட்டர் ரோச் என்பவர், Microsoft Authenticator செயலிழந்ததால் விலைப்பட்டியல்களைச் செயல்படுத்தவும் கணக்கியல் மென்பொருள்களைப் பயன்படுத்தவும் முடியாமல் போனதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வேலை நேர்முகத் தேர்வும் ஒத்திவைப்பு
மைக்ரோசொப்ட் Teams சேவை முடங்கியதால், மெல்பேர்னைச் சேர்ந்த மேனி புளோரஸ் என்பவரின் வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு வருடமாக வேலைவாய்ப்பின்றி இருக்கும் நிலையில், இறுதிக்கட்ட நேர்முகத் தேர்வில் பங்கேற்க முடியாமல் போனதாகவும், அது அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் பாதிப்பு
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களையும் பாதித்துள்ளது.
இறுதிப் பரீட்சைகளுக்குத் தயாராகி வரும் மாணவர்களால் ஆசிரியர்களின் கற்றல் வளங்கள் மற்றும் பாடக் குறிப்புகளை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மெல்பேர்னைச் சேர்ந்த எமிலி யூ என்ற மாணவி, மைக்ரோசொப்ட் சேவை முடக்கத்துடன், விக்டோரியா மாநில கல்வி மதிப்பீட்டு அதிகாரசபையின் இணையத்தளமும் இரண்டு நாட்களாகச் செயலிழந்துள்ளதால் தனது பரீட்சைகளுக்குத் தயாராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மருத்துவ சேவைகளிலும் பாதிப்பு
மருத்துவத் துறையிலும் இந்தச் சேவை முடக்கம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மின்னஞ்சல் மூலம் மருத்துவப் பரிந்துரைகளைப் பெற முடியாததால், சில நோயாளிகளின் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மெல்பேர்னைச் சேர்ந்த தொழில்சார் சிகிச்சை நிபுணர் லோரன் வான் இங்கன், Outlook கணக்கை அணுக முடியாததால் நரம்பியல் பாதிப்புகளைக் கொண்ட நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்கும் பணிகளை முன்னெடுக்க முடியாமல் போனதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விமானப் போக்குவரத்திலும் பாதிப்பு
மைக்ரோசொப்ட் சேவை முடக்கத்தினால் விமானப் போக்குவரத்திலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
சிட்னியைச் சேர்ந்த லிவினியா ட்ரம்மண்ட் என்பவரின் சக ஊழியர் பப்புவா நியூ கினியாவுக்குச் செல்லவிருந்த விமானத்தின் விமானிக்கு தேவையான முன்பயண ஆவணங்கள் Outlook மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டிருந்தன.
அவற்றை அணுக முடியாததால், விமான நிலைய ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், பின்னர் அச்சிடப்பட்ட ஆவணங்களை ஒருவர் நேரில் கொண்டுவந்து வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வெளிநாடுகளில் உள்ள தொழில்நுட்பக் கட்டமைப்புகளை அவுஸ்திரேலியா அதிகளவில் சார்ந்திருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் நியுஷா ஷஃபியாபாடி, வெளிநாடுகளில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளின் தாக்கத்தை அவுஸ்திரேலிய நிறுவனங்கள் உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தொழில்நுட்பக் கட்டமைப்புகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாமல் அவற்றை நவீனமயப்படுத்துவது மட்டும் போதுமானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.