ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, மெல்பேர்னுக்கான விமானப் பயணங்களின் எண்ணிக்கையை வாரத்திற்கு மேலும் மூன்றாக அதிகரிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி முதல் மேலதிக விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் கூட்டுத்தாபனத் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
புதிய விமானப் பயணங்கள் இணைக்கப்படுவதன் மூலம், கட்டுநாயக்கவிலிருந்து மெல்பேர்ன் நகருக்கான வாராந்த விமானப் பயணங்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
அதேவேளை, கட்டுநாயக்கவிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வழமைபோன்று வாரத்திற்கு நான்கு விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்படி, ஆஸ்திரேலியாவுக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் மொத்த வாராந்த விமானப் பயணங்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிக்கவுள்ளது.
மெல்பேர்னுக்கான புதிதாக இணைக்கப்படும் விமானப் பயணங்கள் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து முன்னெடுக்கப்படவுள்ளன.
இது தொடர்பான மேலதிக தகவல்களை 1979 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவோ பெற்றுக்கொள்ள முடியும் என தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.