இந்தோனேசியாவில் இன்று (17) காலை 6.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையத்தின்படி, உள்ளூர் நேரப்படி காலை 6.41 மணியளவில் இந்தோனேசியாவின் தானிம்பார் தீவுகள் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பண்டா கடலுக்கு அடியில் சுமார் 42 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாக ஆஸ்திரேலியாவின் புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர்ந்ததாக இதுவரை 460 இற்கும் மேற்பட்டோர் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.
டார்வின் நகரின் மத்திய பகுதி, பால்மர்ஸ்டன் மற்றும் வடக்கு பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
மேலும், கேதரின், ஜபிரு, மணிங்கிரிடா, மிலிங்கிம்பி மற்றும் நுலுன்புய் உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளிலும் அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலநடுக்கம் ஒப்பீட்டளவில் குறைந்த ஆழத்தில் ஏற்பட்டிருந்தாலும், பரந்துபட்ட பகுதிகளில் அதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் புவியியல் ஆய்வு நிறுவனத்தின் நிலநடுக்கவியல் நிபுணர் தன்ஜா பெஜிக் தெரிவித்துள்ளார்.
இரண்டு புவித் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் பண்டா கடல் பகுதியில் அவுஸ்திரேலியப் புவித்தட்டு மற்றொரு புவித்தட்டின் கீழ் நகர்வதே இத்தகைய நிலநடுக்கங்களுக்குக் காரணம் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, இந்த நிலநடுக்கத்தினால் ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதிக்கோ அல்லது தீவுகளுக்கோ சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின்போது பொதுமக்கள் கீழே குனிந்து, பாதுகாப்பான இடத்தில் மறைந்து, அதிர்வுகள் நிறைவடையும் வரை பிடித்துக்கொள்ளும் பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.