அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது ஆசியப் பயணத்தின் முதல் கட்டமாக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்குச் சென்று, இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் குவாட் (QUAD) அமைப்பின் தலைவர்களுடனான சந்திப்பில் பங்கேற்கவுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறவுள்ள குவாட் தலைவர்களின் முதலாவது சந்திப்பில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டிலும் ட்ரம்ப் பங்கேற்கவுள்ளார். இதன்போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருடன் முத்தரப்புப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவுள்ளார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ட்ரம்பின் குடியரசுக் கட்சி தோல்வியடைந்துள்ள பின்னணியிலும், சீனாவுடனான வர்த்தகப் போர்நிறுத்தத்தைப் பாதிக்கக்கூடிய உளவு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழலிலும் இந்த ஆசியப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதற்கிடையில், ட்ரம்பின் மணிலா விஜயத்திற்கு எதிராக அங்கு போராட்டங்கள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது ட்ரம்பின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டதுடன், மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், அமெரிக்கா தலைமையிலான 'பாக்ஸ் சிலிக்கா' (Pax Silica) முன்னெடுப்பைக் கைவிட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குவாட் சந்திப்பின் முக்கியத்துவம்
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் சந்திப்பு, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தலைமையில் நடைபெறவுள்ள APEC மாநாட்டிற்கு முன்னதாக இடம்பெறுகிறது.
குவாட் அமைப்பை பெய்ஜிங்கைச் சுற்றிவளைக்கும் முயற்சியாக சீனா முன்னர் விமர்சித்துள்ளது. எனினும், எந்தவொரு நாட்டையும் இலக்காகக் கொண்டு இந்த அமைப்பு உருவாக்கப்படவில்லை என அதன் உறுப்பு நாடுகள் தெரிவித்துள்ளன.
இந்தச் சந்திப்பின்போது கடல்சார் பாதுகாப்பு, ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள், முக்கிய கனிம வளங்களுக்கான விநியோகச் சங்கிலி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் கர்ட் கெம்ப்பெல் கருத்துத் தெரிவிக்கையில், சீனா மற்றும் ரஷ்யாவுடனான முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக குவாட் தலைவர்களின் சந்திப்பு இடம்பெறுவது, அமெரிக்காவின் ஆசியக் கூட்டணிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கான முக்கிய சமிக்ஞையாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆசியத் தலைவர்களுடனும் ட்ரம்ப் பேச்சுவார்த்தை
ட்ரம்ப் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை எனினும், அமெரிக்கா – ஆசியான் விசேட உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.
மேலும், புதன்கிழமை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரையும் சந்திக்கவுள்ளார்.
அத்துடன், தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுலுடனும் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்த கூட்டறிக்கையும் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா ஆசியான் அமைப்பின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகத் திகழும் நிலையில், அமெரிக்காவுடனான உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவதில் தென்கிழக்காசிய நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
அமெரிக்காவின் வர்த்தக மற்றும் இராஜதந்திரக் கொள்கைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியிலும், பிராந்திய நாடுகள் இரு வல்லரசுகளுடனும் உறவுகளைப் பேணுவதில் கவனம் செலுத்தி வருகின்றன.