ஆஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கையை 90 சதவீதத்தால் குறைப்பதுடன், புலம்பெயர்ந்தவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகளுக்கான நிரந்தர விசா திட்டத்தையும் இரத்துச் செய்யவுள்ளதாக வன் நேஷன் One Nation கட்சியின் தலைவர் பவுலின் ஹான்சன் அறிவித்துள்ளார்.
இதன்படி, தற்போது ஆண்டுதோறும் 20,000 அகதிகளுக்கு வழங்கப்படும் அனுமதியை 2,000 ஆகக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், புலம்பெயர்ந்தவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆயிரக்கணக்கான நிரந்தர விசாக்களையும் நிறுத்துவதற்கு அக்கட்சி முன்மொழிந்துள்ளது.
ஆஸ்திரேலியா புலம்பெயர்ந்த மக்களின் பங்களிப்பால் கட்டியெழுப்பப்பட்ட நாடு என்றாலும், தற்போதைய குடியேற்றத் திட்டங்களுக்கான செலவுகளை இனியும் தாங்க முடியாது என பவுலின் ஹான்சன் தெரிவித்துள்ளார்.
"இது கடுமையான அணுகுமுறை என அழைக்கப்படலாம். ஆனால், எனது முன்னுரிமை முதன்மையாக ஆஸ்திரேலிய மக்கள்தான்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அகதிகள் மற்றும் பெற்றோருக்கான விசா திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம், அடுத்த பத்து ஆண்டுகளில் அரசாங்கத்துக்கு 100 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களைச் சேமிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின்படி, ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் தற்காலிகப் பால விசாவில் தங்கியுள்ள சுமார் 157,000 புலம்பெயர்ந்தோரின் பெற்றோருக்கு, விசா விண்ணப்பக் கட்டணம் மீளளிக்கப்படும். எனினும், வேறு விசா வழிமுறையின் மூலம் தங்குவதற்கான அனுமதியைப் பெறாவிட்டால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என ஹான்சன் தெரிவித்துள்ளார்.
பெற்றோரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வர விரும்புவோர், அரசாங்கத்தின் செலவில் அல்லாமல் தாங்களே முழுச் செலவையும் ஏற்று அவர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நடைமுறையின்படி, ஆண்டுதோறும் பெற்றோர் மற்றும் வயதான பெற்றோருக்காக 8,500 நிரந்தர விசாக்கள் வழங்கப்படுகின்றன. கடந்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 7,060 ஆக இருந்தது.
அரசியல் கட்சிகளிடையே மாறுபட்ட நிலைப்பாடு
வன் நேஷன் கட்சியின் இந்த முன்மொழிவுக்கு ஆஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
பெற்றோருக்கான விசா திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது மிகவும் கடுமையான நடவடிக்கை எனக் குறிப்பிட்ட அவர், அகதிகளை ஏற்றுக்கொள்வது அவுஸ்திரேலியாவுக்கு உள்ள பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய அகதிகள் வருகையுடன் ஒப்பிடுகையில் அவுஸ்திரேலியாவின் பங்களிப்பு மிகவும் குறைவானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், தற்போதைய ஆண்டுக்கு 20,000 என்ற அகதிகள் அனுமதி எண்ணிக்கையைத் தொடர்ந்து பேணுவதற்கு தொழிற்கட்சி (லேபர்) உறுதியளித்துள்ளது.
மறுபுறம், எதிர்க்கட்சியான கூட்டணி (கோலிஷன்) ஆண்டுதோறும் அனுமதிக்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையை 10,000 ஆகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
அதேவேளை, அவுஸ்திரேலியாவின் மொத்த வெளிநாட்டு குடியேற்ற எண்ணிக்கையை ஆண்டுக்கு 225,000 ஆகக் கட்டுப்படுத்த அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.