சிட்னி நகரின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகமொன்றில் இரு சிறுவர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகி, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிட்னியின் காஸ்டில் ஹில் (Castle Hill) பகுதியில் அமைந்துள்ள காஸ்டில் டவர்ஸ் (Castle Towers) வணிக வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவசர சேவையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு உடலில் கத்திக்குத்துக் காயங்களுடன் இரு சிறுவர்கள் காணப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திலேயே அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து இருவர் வணிக வளாகத்திலிருந்து வெளியேறியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இச்சம்பவத்தால் பொதுமக்களுக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காஸ்டில் ஹில் பொலிஸ் நிலையம் அல்லது குற்றத் தடுப்பு பிரிவினரை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.