‘பிரபாகரன் ஆத்மகௌரவம் உள்ள ஓர் நபர் என்பதாலேயே, சரணடையுமாறு முன்வைக்கப்பட்ட கோழைத்தனமான யோசனைக்கு அவர் உடன்படவில்லை’ என்று இலங்கையில் இறுதிக்கட்டப் போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்பியுள்ள சரத் பொன்சேகா, அதன் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றுகையிலேயே மேற்கண்ட கருத்தை வெளியிட்டார்.
“நாம் போரில் ஈடுபட்டோம். இது குறித்து இராணுவத்தினருக்கு நன்கு தெரியும். எமது முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, இறுதிக்கட்டப் போரின்போது 10 கிலோமீற்றர் தூரத்துக்குள் புலித் தலைவர்களை முடக்கி வைத்திருந்தபோதும், திடீரென போர் நிறுத்தம் வழங்கப்பட்டது. தெற்கில் மக்கள் பாற்சோறு சமைப்பதற்குத் தயாராகியிருந்த வேளையில், ஆட்சியாளர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
2019 மே 17ஆம் திகதியளவில் புலித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை 400 மீற்றர் தூரத்துக்குள் முடக்கி வைத்திருந்தபோது, அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் சரணடையுமாறும் புலிகளுடன் ஆட்சியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், பயங்கரவாதி என்றபோதிலும், பிரபாகரன் ஆத்மகௌரவம் உள்ள நபர் என்பதால் அந்தக் கோழைத்தனமான முடிவுக்கு உடன்படவில்லை. போரிட்டு இராணுவத்தின் கையில் உயிரிழப்பதே மேல் என அவர் கருதியிருப்பார்.
நாட்டு மக்கள் போர் வெற்றியைக் கொண்டாடத் தயாராக இருந்தபோதிலும், அப்போது அரச தலைவராக இருந்தவர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் புலிகளை உயிருடன் கைது செய்ய முற்பட்டனர். அவ்வாறு நடந்திருந்தால் அந்நேரம் வடக்கு, கிழக்கில் மீண்டும் போர் ஆரம்பமாகியிருக்கக்கூடும்.
இப்படியான தலைவர்களே இன்று இராணுவம் பற்றி பேசுகின்றனர்” என சரத் பொன்சேகா தெரிவித்தார்.