இணையவழித் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்தத் தவறும் கூகுள், மெட்டா உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவற்றின் உலகளாவிய வருமானத்தில் 5 சதவீதம் வரை அபராதம் விதிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான புதிய டிஜிட்டல் பாதுகாப்புச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின்படி, சமூக ஊடகங்கள், தேடுபொறிகள், செய்திப் பரிமாற்றச் செயலிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உரையாடல் தளங்கள் உள்ளிட்ட இணையச் சேவைகள், தமது தளங்களில் தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கங்களைக் கண்டறிந்து அவற்றைத் தடுக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கும்.
குறிப்பாக, சிறுவர்கள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்கள், அனுமதியின்றி உருவாக்கப்படும் போலியான நிர்வாணப் படங்கள், பாலின அடிப்படையிலான வன்முறைகள், சுயதீங்கு தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவித்தல் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான பதிவுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இதற்கு முன்னர், இத்தகைய விதிமீறல்களுக்கு அதிகபட்சமாக 109 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் அபராதம் விதிக்க முன்மொழியப்பட்டிருந்தது. எனினும், புதிய திருத்தங்களின்படி நிறுவனங்களின் உலகளாவிய வருமானத்தில் 5 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும், இணையத் தளங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக தனிநபர்கள் குறித்த நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் புதிய சட்டம் வழிவகுக்கின்றது.
அத்துடன், 16 வயதுக்கு மேற்பட்ட அவுஸ்திரேலியப் பயனர்கள், தங்களது சமூக ஊடகங்களில் அல்கோரிதம் அடிப்படையிலான பரிந்துரைகளை முடக்கிக்கொள்ளும் வசதியையும் இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தவுள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தொழிற்கட்சி அரசாங்கமும் பசுமைக் கட்சியும் இணைந்து இந்தச் சட்டமூலம் தொடர்பில் உடன்பாட்டை எட்டியுள்ளன. இச்சட்டமூலம் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் எவை என்பதைத் தீர்மானிப்பதில் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அதிகாரம், கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடும் என தொழில்நுட்ப நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
தண்டனைகளைத் தவிர்ப்பதற்காக சமூக ஊடக நிறுவனங்கள் அதிகளவிலான பதிவுகளை நீக்கும் நிலை ஏற்படலாம் என்றும் தொழில்துறை அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும், குறிப்பாக சிறுவர்களைப் பாதுகாப்பதிலும் இந்தச் சட்டம் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.