ஆஸ்திரேலியாவில் சில விருப்புரிமை அறக்கட்டளைகளின் (Discretionary Trusts) வருமானப் பகிர்வுகளுக்கு குறைந்தபட்சம் 30 சதவீத வரி விதிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு கிரீன்ஸ் கட்சி ஆதரவு வழங்கியுள்ளது.
இதன் மூலம், செனட் சபையில் குறித்த வரி சீர்திருத்தச் சட்டமூலம் நிறைவேறுவதற்குத் தேவையான ஆதரவை தொழிற்கட்சி அரசாங்கம் பெற்றுள்ளது.
இதற்குப் பதிலாக, தனியார் ஜெட் விமானங்களுக்கான எரிபொருள் வரியையும் உயர்த்துவதற்கு கிரீன்ஸ் கட்சி நிபந்தனை விதித்துள்ளது. இதன்படி, தனியார் ஜெட் விமானங்களுக்கான எரிபொருள் வரி, சாதாரண வாகனங்களுக்கான வரி வீதத்துக்கு இணையாக லீற்றருக்கு 53.7 சதமாக உயர்த்தப்படவுள்ளது. தற்போது அது 3.56 சதமாக உள்ளது.
விருப்புரிமை அறக்கட்டளைகள் மூலம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பங்குதாரர்களிடையே வருமானத்தைப் பகிர்ந்தளித்து, அதிக வருமான வரியைத் தவிர்க்கும் நடைமுறையைக் கட்டுப்படுத்துவதே இந்த வரி மாற்றத்தின் நோக்கமாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த வரி மாற்றங்கள் சிறு வணிகங்கள் மற்றும் தொழில்துறையினருக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என வர்த்தக அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதனால் சுமார் ஒரு பில்லியன் அவுஸ்திரேலிய டொலர் அளவுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் அவை எச்சரித்துள்ளன.
மறுபுறம், வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்தவும் வரி முறையை மேலும் நியாயமானதாக்கவும் இந்தச் சீர்திருத்தங்கள் உதவும் என கிரீன்ஸ் கட்சியின் செனட் உறுப்பினர் நிக் மெக்கிம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டமூலத்தை எதிர்க்கட்சியான கூட்டணி (Coalition) எதிர்த்து வந்த நிலையில், கிரீன்ஸ் கட்சியின் ஆதரவு மூலம் செனட் சபையில் அதனை நிறைவேற்றுவதற்கான வழி ஏற்பட்டுள்ளது.