ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடியின சிறுவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறும் அரசாங்கங்களைப் பகிரங்கமாகப் பொறுப்புக்கூறச் செய்யும் வகையில், ஆண்டுதோறும் மதிப்பீட்டு அறிக்கைகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தேசிய பூர்வக்குடியின சிறுவர் ஆணையாளர் சூ-ஆன் ஹண்டர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் தேசிய ஊடக மன்றத்தில் உரையாற்றிய அவர், பூர்வக்குடியின சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதிப்படுத்துவதில் அரசாங்கங்களின் பொறுப்புடைமையும் வெளிப்படைத்தன்மையும் அவசியம் என வலியுறுத்தினார்.
ஆஸ்திரேலியாவில் ஏனைய சிறுவர்களுடன் ஒப்பிடுகையில், பழங்குடியின சிறுவர்கள் குடும்பப் பராமரிப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு மாற்றுப் பராமரிப்பில் வைக்கப்படுவதற்கான வாய்ப்பு 9.6 மடங்கு அதிகமாகவும், இளையோர் தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்படுவதற்கான வாய்ப்பு சுமார் 27 மடங்கு அதிகமாகவும் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தடுக்கும் வகையில், குற்றப் பொறுப்புக்கான குறைந்தபட்ச வயதை 14 ஆக உயர்த்துதல், சிறுவர்களை வயது வந்தோருக்கான தடுப்பு நிலையங்களில் தடுத்து வைப்பதை நிறுத்துதல், பழங்குடியின சமூக அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட ஆறு முக்கிய கோரிக்கைகளை அரசாங்கங்களிடம் அவர் முன்வைத்துள்ளார்.
மேலும், சிறுவர் வறுமையை அளவிடுவதற்கான தேசியத் திட்டமொன்றை உருவாக்குதல், பழங்குடியின சிறுவர்களை குடும்பங்களிலிருந்து பிரிப்பதைத் தடுக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பராமரிப்பில் இருக்கும்போது உயிரிழக்கும் சிறுவர்கள் தொடர்பான தரவுகளைப் பகிரங்கப்படுத்துதல் ஆகியவற்றையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
1991ஆம் ஆண்டு முதல் பழங்குடியின விவகாரங்கள் தொடர்பாக சுமார் 1,600 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றில் பல உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கங்களின் முன்னேற்றத்தை ஆண்டுதோறும் மதிப்பீடு செய்து அறிக்கைகளை வெளியிடவுள்ளதாகத் தெரிவித்த அவர், தேவையேற்பட்டால் பழங்குடியின சிறுவர்களின் உரிமைகள் தொடர்பில் தேசிய விசாரணையொன்றையும் முன்னெடுக்கத் தயார் எனக் கூறியுள்ளார்.