அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 14 முக்கிய வர்த்தகப் பங்காளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தித் துறையைப் பாதுகாப்பதையும், வெளிநாடுகளின் அதிகப்படியான தொழில்துறை உற்பத்தியால் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்மொழியப்பட்டுள்ளது.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் முன்னெடுத்த எட்டு மாத கால விசாரணையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, சீனப் பொருட்களுக்கு அதிகபட்சமாக 20 சதவீத வரியும், ஜப்பான், தென்கொரியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவற்றின் பொருட்களுக்கு 15 சதவீத வரியும் முன்மொழியப்பட்டுள்ளன.
அத்துடன், பங்களாதேஷ், கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் பொருட்களுக்கு 18 சதவீத வரி விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா தொடர்பில் வர்த்தக உடன்படிக்கை எட்டப்பட்டால் 17 சதவீத வரியும், உடன்பாடு எட்டப்படாவிட்டால் 25 சதவீத வரியும் விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஏற்கனவே எட்டப்பட்ட அல்லது பேச்சுவார்த்தையில் உள்ள வர்த்தக உடன்படிக்கைகளின் அடிப்படையில் இந்த வரி விகிதங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும் என அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த முன்மொழியப்பட்ட வரிகள் ஜனவரி 25ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுக் கருத்துக் கேட்புக்குப் பின்னரே நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது.
இதேவேளை, சீனா மீதான அதிகப்படியான தொழில்துறை உற்பத்தி குறித்த குற்றச்சாட்டுகளை அந்நாட்டு அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன், வர்த்தகப் போரைத் தூண்டுவதற்கு இதனைப் பயன்படுத்தக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது
புதிய வரி விதிப்பு நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா இடம்பெறவில்லை.