பசிபிக் தீவு நாடான பிஜியில் எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் கடுமையான வறட்சி நிலவி வருவதுடன், குடிநீர் தட்டுப்பாடும் தீவிரமடைந்துள்ளது.
இதன் காரணமாக நாடு முழுவதும் தேசிய அனர்த்த நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ள பிஜி அரசாங்கம், அவசரகால நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
பிஜியின் தேசிய அனர்த்த முகாமைத்துவ கட்டுப்பாட்டாளர் மிடிலி காமா வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டின் 92 சமூகங்களுக்கான நீர்விநியோகம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 372 சமூகங்கள் மிகவும் குறைந்த நீர்மட்டத்தை எதிர்கொண்டுள்ளன.
கண்காணிக்கப்படும் நீர்மூலங்களில் 61 சதவீதம் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வறட்சி நிலைமை அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை நீடிக்கக்கூடும் என பிஜி அரசாங்கம் எச்சரித்துள்ளது.
இதனிடையே, பிஜிக்கு சுற்றுலா செல்லும் ஆஸ்திரேலியப் பயணிகள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, ஏற்கனவே தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள நீர் மற்றும் மின்சார விநியோகக் கட்டமைப்புகளுக்கு மேலதிக அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், வறட்சி காரணமாக பிஜியின் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படக்கூடும் என்பதால், மின்சார உற்பத்திக்காக அதிக செலவிலான எரிபொருள் பயன்பாட்டை நாட வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எல் நினோ தாக்கத்தால் பப்புவா நியூ கினியாவிலும் சுமார் 680,000 பேருக்கு வறட்சி நிவாரண உதவிகள் தேவைப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.