தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை நினைவு கூரும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் இன்றாகும்.
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்படவுள்ளன.
இதனை முன்னிட்டு இரு மாகாணங்களிலும் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் பல்வேறு நினைவேந்தல் இடங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவீரர்களின் உறவினர்கள், நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
மாவீரர்களை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மாலை 6.05 மணிக்கு மணியோசை ஒலிக்கச் செய்யப்பட்டு ஆரம்பமாகவுள்ளன. தொடர்ந்து 6.06 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, 6.07 மணிக்கு ஈகச்சுடர் ஏற்றப்படவுள்ளது.
வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர்களின் பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காகத் துயிலும் இல்ல வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டு, நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான இடங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, நினைவேந்தல் நிகழ்வுகள் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதிலும் ஏற்பாட்டாளர்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.