நியூசிலாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகளின்படி, பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தலைமையிலான ஆளும் கூட்டணி பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ளதால், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு மத்திய நிலைப்பாட்டைக் கொண்ட ஒப்பர்ச்சூனிட்டி (Opportunity) கட்சியின் ஆதரவைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 7ஆம் திகதி நடைபெற்ற தேர்தலின் ஆரம்பகட்ட முடிவுகளின்படி, லக்ஸன் தலைமையிலான மூன்று கட்சிகளைக் கொண்ட ஆளும் கூட்டணி இரண்டு ஆசனங்கள் வித்தியாசத்தில் பெரும்பான்மையைப் பெற்றிருந்தது.
எனினும், கடந்த மூன்று வாரங்களாக எண்ணப்பட்ட வெளிநாடுகளில் வசிப்போர் மற்றும் தமது தேர்தல் தொகுதிக்கு வெளியே வாக்களித்தோர் உள்ளிட்டோரின் சுமார் நான்கு இலட்சம் விசேட வாக்குகள் உள்ளடங்கிய இறுதி முடிவுகளை நியூசிலாந்து தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஆளும் கூட்டணி 65 ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்குத் தேவையான எண்ணிக்கையை விட ஓர் ஆசனம் குறைவாக உள்ளது.
இதனால், மீண்டும் ஆட்சியமைப்பதற்கு ஒப்பர்ச்சூனிட்டி கட்சியின் தலைவி கியுலே வொங்குடன் (Qiulae Wong) கிறிஸ்டோபர் லக்ஸன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
லக்ஸன் தலைமையிலான மத்திய வலதுசாரி தேசியக் கட்சி 40 ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான மத்திய இடதுசாரி தொழிலாளர் கட்சி 36 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
இதற்கிடையில், தொழிலாளர் கட்சித் தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தொழிலாளர் கட்சி, பசுமைக் கட்சி மற்றும் தே பாட்டி மாவோரி (Te Pāti Māori) கட்சி ஆகியவை இணைந்தாலும், ஒப்பர்ச்சூனிட்டி கட்சியின் ஆதரவு கிடைத்தாலும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைப் பெற முடியாது என இறுதி முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
லக்ஸனால் ஒப்பர்ச்சூனிட்டி கட்சியுடன் இணக்கப்பாட்டை எட்ட முடியாவிட்டால், நியூசிலாந்தில் மீண்டும் பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெறும் கட்சியுடனேயே முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஒப்பர்ச்சூனிட்டி கட்சித் தலைவி வொங் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இறுதி முடிவுகளின்படி, தேர்தல் இரவில் வெளியான ஆரம்பகட்ட முடிவுகளுடன் ஒப்பிடுகையில் மூன்று ஆசனங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தேசியக் கட்சி இரண்டு ஆசனங்களை இழந்துள்ளதுடன், பசுமைக் கட்சி தனது ஆசன எண்ணிக்கையை 16 இலிருந்து 17 ஆக அதிகரித்துள்ளது.
ஏனைய கட்சிகள் பெற்ற ஆசனங்களின் விபரம் வருமாறு:
- தேசியக் கட்சி – 40 ஆசனங்கள்
- தொழிலாளர் கட்சி – 36 ஆசனங்கள்
- பசுமைக் கட்சி – 17 ஆசனங்கள்
- ஏசிடி நியூசிலாந்து – 13 ஆசனங்கள்
- நியூசிலாந்து ஃபர்ஸ்ட் கட்சி – 12 ஆசனங்கள்
- ஒப்பர்ச்சூனிட்டி கட்சி – 7 ஆசனங்கள்
- தே பாட்டி மாவோரி கட்சி – 5 ஆசனங்கள்
தேசியக் கட்சி மற்றும் தே பாட்டி மாவோரி கட்சிகள் தத்தமது வாக்குப் பங்கிற்கு கிடைக்க வேண்டிய எண்ணிக்கையை விட அதிகமான தொகுதி ஆசனங்களை வென்றுள்ளதால், நாடாளுமன்றத்தில் மேலதிகமாக 10 ஆசனங்கள் உருவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தேசியக் கட்சி ஆறு மேலதிக தொகுதி ஆசனங்களையும், தே பாட்டி மாவோரி கட்சி நான்கு மேலதிக தொகுதி ஆசனங்களையும் பெற்றுள்ளதாக ஆணைக்குழு விளக்கமளித்துள்ளது.
மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதற்குத் தயாராக இருப்பதாக நியூசிலாந்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமைத் தேர்தல் அதிகாரி கார்ல் லு குவெஸ்னே (Karl Le Quesne) தெரிவித்துள்ளார்.
ஆதரவு வழங்குவதற்கான நிபந்தனைகள்
இதற்கிடையில், தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கத் தயாராகி வருவதாக ஒப்பர்ச்சூனிட்டி கட்சித் தலைவி வொங் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதைய கூட்டணி அரசாங்கத்தில் வின்ஸ்டன் பீட்டர்ஸ் வெளிவிவகார அமைச்சராகத் தொடர்ந்தால், அந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என்ற தனது கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்காகப் பல நிபந்தனைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.
அவற்றில் அரசியல் பரப்புரை மற்றும் பரப்புரைச் செலவீன நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல், பல்பொருள் அங்காடித் துறையில் நிலவும் போட்டியற்ற வர்த்தக நடைமுறைகளைக் கட்டுப்படுத்துதல், சுகாதாரத் துறைக்கான புதிய திட்டத்தை உருவாக்குதல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கைக்கு மீண்டும் உறுதியளித்தல் ஆகியவை உள்ளடங்குகின்றன.
இவை அனைத்தும் நம்பிக்கை மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான உடன்படிக்கை அல்லது கூட்டணி ஒப்பந்தத்திற்கு அவசியமான குறைந்தபட்ச நிபந்தனைகள் என வொங் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை மற்றும் நிதி ஒதுக்கீட்டு ஆதரவை உறுதிப்படுத்தியவாறு, ஒப்பர்ச்சூனிட்டி கட்சி அரசாங்கத்திற்கு வெளியே சுயாதீனமாகச் செயற்படவும் வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியமைப்பது தொடர்பான அனைத்து வாய்ப்புகளும் திறந்த நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.