விக்டோரியா மாநிலத் தேர்தலில் தொழிற்கட்சி (Labor) படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், அடுத்த நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பை யார் ஏற்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெஸ் வில்சன் தலைமையிலான லிபரல் – தேசியக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், தொழிற்கட்சியின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் வரலாறு காணாத அளவுக்குச் சரிந்துள்ளது.
88 உறுப்பினர்களைக் கொண்ட கீழவையில் ஆட்சியமைக்க 45 ஆசனங்கள் தேவைப்படும் நிலையில், கூட்டணி 50க்கும் மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதற்கிடையில், கிரீன்ஸ் கட்சி (Greens) வரலாற்றில் முதன்முறையாக விக்டோரியா மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
அக்கட்சியின் தலைவி எலன் சாண்டெல் தனது மெல்பேர்ன் தொகுதியைத் தக்கவைத்துள்ளதுடன், பசுமைக் கட்சி குறைந்தது ஆறு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. மேலும் சில தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
தொழிற்கட்சி மூன்று தொகுதிகளை மட்டுமே தக்கவைத்துள்ளதாக ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. முன்னாள் முதலமைச்சர் பென் கரோலும் தனது தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.
மறுபுறம், வன் நேஷன் கட்சி கீழவையில் இதுவரை ஆசனங்களைப் பெறாதபோதிலும், மேலவையில் குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளது. அக்கட்சியின் வாக்கு விகிதமும் தொழிற்கட்சியை விட அதிகமாகப் பதிவாகியுள்ளது.
இதனால், விக்டோரியா மாநில அரசியலில் பாரம்பரிய இரு கட்சி ஆதிக்கம் மாறி, புதிய அரசியல் சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், இறுதி வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பின்னரே உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக எந்தக் கட்சி அமையும் என்பது உறுதியாகும்.