AUKUS பாதுகாப்பு ஒப்பந்தம் வெற்றியளிக்க அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார் என தான் நம்புவதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனாலட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் 2-வது முறையாக அவர் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் டொனால்ட் ட்ரம்புடன், தொலைபேசிமூலம் உரையாற்றிய ஆஸ்திரேலிய பிரதமர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அத்துடன், AUKUS பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் பொருளாதார உறவு உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் பேச்சு நடத்தியுள்ளார்.
ட்ரம்பின் ஆட்சியின்கீழ் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான உறவு மேலும் மேம்படும் எனவும், ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுடன், ஆஸ்திரேலியா அரசு நெருக்கமாக செயற்படும் எனவும் பிரதமர் அந்தோனி அல்பானீஸி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஆஸ்திரேலியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் சில கொள்கைகளில் வெவ்வேறு அணுகுமுறை இருந்தாலும் இரு நாடுகளும் தொடர்ந்து நெருக்கமாக செயற்படும் என்று வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் தெரிவித்துள்ளார்.
லிபரல் கட்சி தலைவர் மற்றும் கிறீன்ஸ் கட்சி தலைவர் ஆகியோரும் அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ட்ரம்புக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.