அமெரிக்காவை டொனால்ட் ட்ரம்ப் ஆளவுள்ள நிலையில், பொருளாதார ரீதியில் ஏற்படும் விளைவுகள் மற்றும் எதிர்கால வர்த்தக நகர்வுகள் சம்பந்தமாக ஆஸ்திரேலிய மத்திய வங்கி தனது கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளது.
ட்ரம்ப் ஆட்சியின் சில கொள்கைகள் ஆஸ்திரேலிய பொருளாதாரத்துக்கு பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று மத்திய வங்கி ஆளுநர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
அதன் தாக்கம் எவ்வாறு அமையும் என்பது பற்றி இன்னும் கணிப்பிடப்படவில்லை. எனினும், அதனை சமாளிப்பதற்குரிய வியூகம் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீனாமீதான ட்ரம்பின் பொருளாதார அணுகுமுறைகள் தொடர்பிலும் கன்பரா அவதானம் செலுத்தியுள்ளது. சீனாமீது அதிக வரிகள் விதிக்கப்படுமானால் அது ஆஸ்திரேலிய பொருளாதாரத்திலும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் குறைவடைந்துள்ள நிலையில், வட்டி விகிதமும் மாறா விகிதத்தில் பயணிக்கின்றது. எனினும், உலக சந்தையில் மாற்றங்கள் நிகழும் பட்சத்தில் மத்திய வங்கியும் சில முடிவுகளை எடுக்க நேரிடும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை, அமெரிக்காவின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் உக்ரைன், ரஷ்ய போர் மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக சர்வதேச போரியல் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.