பூர்வக்குடி மக்களுக்குரிய கொடியை பயன்படுத்த மாட்டார் எனக் கூறும் எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன், பிரதமர் பதவிக்கு வருவதற்கு தகுதியற்றவர் என்று ஆஸ்திரேலிய பூர்வக்குடி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியர்கள் ஒரே கொடியின்கீழ் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தும் எதிர்க்கட்சி தலைவர், தான் பிரதமரானால் ஊடக சந்திப்புகளின்போது ஏனைய கொடிகளை காட்சிப்படுத்தப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளார்.
ஒரு கொடியின்கீழ் நிற்பதுதான் எம்மை ஐக்கியப்படுத்தும், பல கொடிகளின்கீழ் நிற்பது பிளவுபடுத்தும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரின் மேற்படி கருத்துக்கு பூர்வக்குடி மக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய அரசியலில் இருந்து பூர்வக்குடி மக்களை ஓரங்கட்டுவதற்குரிய முயற்சி இதுவெனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், பிரதமர் பதவிக்கு தான் தகுதியற்றவர் என்பதை பீட்டர் டட்டன் உறுதிப்படுத்திவிட்டார் என பூர்வக்குடி அமைச்சர் அறிக்கையொன்றின்மூலம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியர்களை பிளவுபடுத்துவதற்காக அவர் கலாசார போரை தூண்டுகின்றார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பூர்வக்குடி மக்களின் கொடிகள் சட்டப்பூர்வமானவை எனவும், அவற்றை பயன்படுத்துவது பெருமைக்குரிய விடயம் எனவும் பூர்வக்குடி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.