Rio Tinto கனிய அகழ்வு நிறுவனத்தில் பணியாற்றிய 21 பேர் கடந்த ஐந்து வருடங்களாக பாலியல் துன்புறுதலுக்கு உள்ளாகியுள்ளமை தெரிய வந்துள்ளது. மேற்கு அவுஸ்திரேலியா வில் உள்ள பாரிய கனிய அகழ்வு நிறுவனம் Rio Tinto. 35 நாடுகளில் செயற்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் அகழ்வுப்பணியாளர்களாக கடமையாற்றிய பலர் பாலியல் துன்புறுதலுக்கு ஆளாகியுள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையிலும் நீதிமன்றத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையிலும் மேற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டது. இத்தகைய விசாரணைகளின் மூலம் வேலைத்தளத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள Rio Tinto நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை. எனினும் கடந்த ஐந்து வருடங்களில் தமக்கு 21 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மேற்படி நிறுவனம் கூறியுள்ளது. 2019 முதல் 48 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இன்னொரு தகவல் கூறுகிறது.
இந்த பிரதேசத்தில் 28வீதமான பெண்களும் 7வீதமான ஆண்களும் துன்புறுதலுக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த எண்ணிக்கை வேலைத்தளத்தில் 48வீதமாக காணப்படுகிறது. பெண்களின் சாப்பாட்டு அறையிலும், உடற்பயிற்சி பகுதியிலும் இருட்டான இடங்களிலும் வேலை முடிந்த நேரங்களில் தாங்கள் ஆண்களால் பாலியல் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக இங்கு கடமையாற்றும் பெண்கள் தெரிவித்துள்ளனர். இங்கு கடமையாற்றும் பெண்களிடையே ஆண்களால் திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்படும் பாலியல் சீண்டல்களை சகித்துக்கொள்ளும் போக்கு சர்வசாதாரணமாக காணப்படுகிறது.
கடந்த காலத்திலோ இப்போதோ இடம்பெற்ற, இடம்பெற்று வரும் சம்பவங்களுக்காக தாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக Rio Tinto அறிவித்துள்ளது.
இங்கு பணி புரியும் 10,000 பெண்களிடையே நான்கிலொரு பங்கினரிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவே அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.