AustraliaCommunityHealth

மனமே! காயமா?

 ஆஸ்திரேலியாவில் மன அழுத்ததினால் பாதிக்கப்படுவோரில் புலம்பெயர்ந்தவர்களே அதிகம். குறிப்பாக அகதிகளில் இளவயதினரின் சாவுகள் அதிகரித்துள்ள நிலையில் இத்தகைய மெல்லக்கொல்லும் மன அழுத்தம் குறித்து சிட்னிவாழ் பிரபல மன அழுத்த வைத்தியர் ரைஸ் , ‘எதிரொலிக்காக’ வழங்கிய பிரத்தியேக செவ்வி இது.

கேள்வி : புலம் பெயர்ந்தவர்களுக்கு பொதுவாக என்னென்ன வகையில் மனநலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு ?

பதில் : புதிய இடம், புதிய மனிதர்கள், புதிய மொழி மற்றும் புதிய கலாசாரத்துக்குள் நுழைவதால் புலம் பெயர்ந்தவர்களுக்கு பொதுவாக மனஅழுத்தம், பதற்ற நோய், மனச்சிதைவு போன்ற மனநலச் சோர்வுகள் சராசரி மனிதர்களை விட அதிக சதவிகிதத்தில் ஏற்படுகிறது. ஆனால் உள்நாட்டுப் போர், பேரினவாத ஒடுக்குதல் மற்றும் தாய் மண்ணின் மீது வெளி நாட்டினரின் ஆக்கிரமிப்பு என பல காரணங்களால் அகதிகளாகி, பின் புலம் பெயர்ந்தவர்களுக்கு மேலே சொன்ன பாதிப்புகள் தவிர்ந்து, Post Traumatic Stress Disorder (PTSD) எனச் சொல்லக் கூடிய மனக்காய நோயும் ஏற்படுகிறது.

கேள்வி : மனக்காயமா? அது ஏன் அப்படி? இந்த PTSD பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன் ?

பதில் : அகதியாக வருபவர்கள் புலம் பெயர்வதற்கு முன்பு அனுபவிக்கும் எண்ணிலடங்கா போர் மற்றும் பேரினவாத அடக்குமுறை போன்ற இன்னல்களின் விளைவுகள் , போரினால் அவர்கள் தங்களது வீடு சொத்து இழந்து மற்றும் சொந்த பந்தங்களையும் அப்படியே விட்டு விட்டு நிர்க்கதியாக வருதல், பல அகதிகள் தஞ்சம் புகுந்த நாட்டில் நீண்டகாலம் தடுப்பு முகாம்களி்ல் கடுமையான சூழ்நிலையில் வைக்கப்படுதல், குடி புகுந்த நாட்டில் எளிதில் வேலை கிடைக்காமல் திண்டாடுதல், இனப்பாகுபாடால் புறக்கணிக்கப்படல், தற்ப்போதைய சூழ்நிலை காரணமாக தான் பிறந்த நாட்டுக்கு எளிதில் பயணம் செய்யவோ இல்லை திரும்பிப்போக முடியாத நிலை போன்ற பலகாரணிகளால் இருப்பதாலும் இந்த மனக்காய நோய் அவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது.

கேள்வி: மனக்காய நோயின் அறிகுறிகள் என்னென்ன?

பதில் : மனஅழுத்தம் மற்றும் மனப்பதற்றம் என்பவற்றோடு அவர்களுக்கு சில பிரத்யேகமான அறிகுறிகளும் இருக்கலாம். ஏற்கனவே அனுபவித்த கொடுமைகள் , விடாமல் கொடுங்கனவாக (nightmares) வருவதால் தூக்கம் பாதிக்கலாம், பழைய கொடுமையான சம்பவங்களின் ஞாபகம் (flash backs) திடீர் திடீரென ஏற்பட்டு அடிக்கடி மனப்பதற்றம் (panic attack) ஏற்படலாம், தன்னை சுற்றி ஏதாவது ஆபத்து நேரப் போகிறதோ எனும் பதற்றத்திலேயே எப்போதும் இருக்கலாம் (hyper vigilance) , தன்னைச் சுற்றி ஏதாவது சிறு சத்தம் கேட்டாலும் பதறும் நிலை இருக்கலாம் (startling response), போர், விமானம், துப்பாக்கிச் சூடு போன்ற செய்திகளை கேட்கவோ பார்க்கவே கடினமாக இருப்பதால் அவற்றைத் தவிர்ப்பர். இது போக அவர்களுக்கு மனஅழுத்தத்துக்குரிய மற்ற அறிகுறிகளும் சேர்ந்தே இருக்கலாம். இதனால் சிலர் தங்களது துன்பங்களுக்கு வடிகாலாக போதை மற்றும் சூதாட்டாத்துக்கும் அடிமையாகின்றனர்.

எனக்குத் தெரிந்த இலங்கையிலிருந்து அகதியாக வந்து குடிபெயர்ந்த ஒருவர் எப்பொழுதெல்லாம் தனது வீட்டின் மேல் பகுதியில் விமானம் பறக்கிறதோ அப்பொழுதெல்லாம் ‘செல் அடிக்கிறாங்கள்’ எனச் சொல்லிக் கொண்டே பதறி பயந்தடித்துக் கொண்டு தனது வீட்டின் மேசையின் கீழ் போய் ஒளிந்துக் கொள்வார்.

இதில் துயரமான விடயம் என்றவென்றால் போர் அகதிகளாக வந்த பல பேர் இந்நாட்டில் முறையான விசா கிடைக்காததால் பெரும் அவதியுறுகின்றனர். அவர்களில் சிலர் இந்த மனப் போராட்டத்தில் மனமுடைந்து தற்கொலை செய்தும் கொள்கின்றனர்.

அது போல அவர்களின் பொது உடல் நலனும் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கின்றது. இவ்வருடத்தின் முதல் கால் பகுதியில் மட்டும் குறைந்தது பத்து இலங்கை அகதிகள் திடீரென உடல் நல குறைவால் இறந்துள்ளனர். அவர்கள் அனைவரும் நாற்பது வயதுக்குட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சியான தகவல்.

கேள்வி: இதற்கு தீர்வு உண்டா ?

பதில்: ஆம் நிச்சயமாக இருக்கிறது. பொதுவாக பதற்ற நோய்க்குரிய மருந்தும், கொடுங்கனவுக்கான பிரத்யேக மருந்து என்பவற்றைத் தவிர , மனக்காயத்துக்கென பிரத்யேகமான மனநல ஆலோசனைத் தேவைப்படும். இது போக Eye Movement Desensitization and Reprocessing (EMDR) எனும் ஒரு வகை மனநல ஆலோசனையும் சில பேருக்கு தேவைப்படலாம். மனக்காயம் ஏற்பட்டவர்களுக்கு ஆலோசனை கொடுக்கும் போது மனக்காயம் ஏற்படுத்திய சம்பவங்கள் பற்றி விவாதிப்பது உண்டு. ஆனால் அவற்றைப் பற்றிய ஞாபகங்கள் ஆழ்மனதில் அமுக்கப்பட்டுக் கிடப்பதால் அவைப்பற்றிய விபரங்கள் அவர்களுக்கு எளிதில் வெளி மனதுக்கு வராது. அந்த சம்பவங்களின் ஞாபகத்தை தூண்டி அதை அலசி காயத்துக்கு தீர்வு காண்பது தான் இந்த EMDR எனுப்படும் சிகிச்சையின் சாராம்சம். இங்கு N(SERVICE FOR THE TREATMENT AND REHABILITATION OF TORTURE AND TRAUMA SURVIVORS) மனக்காயம் பட்ட அகதிகளுக்கு இலவசமாக மனநல ஆலோசனையும் சிகிச்சையும் அளிக்கிறது.

நேர்காணல் : நேகா

Related Articles

Back to top button