ஆஸ்திரேலியா பயணித்த விமானத்தில் பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் எனக் கூறப்படும் இலங்கையர், நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
41 வயதான நபரொருவருக்கே மெல்பேர்ண் நீதிமன்றத்தால் நேற்று குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18ஆம் திகதி ஆஸ்திரேலியாவுக்கு பயணித்த விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மெல்பேர்ணில் இவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகளின் பின்னர் 19 ஆம் திகதி கடும் நிபந்தனைகளுடன் அவருக்கு பிணை வழங்க்பபட்டிருந்தது.
அதனையடுத்து, அவர் தனது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைத்துள்ளதோடு, வழக்கு விசாரணை முடியும் வரை விக்டோரியாவில் தங்கியிருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிணை நிபந்தனைகளின் அடிப்படையில், வாரத்துக்கு மூன்று முறை அவர் பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
இதேவேளை, விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமரா பதிவுகளை இம்மாதம் 30ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்தக்கட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.
அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படக்கூடும்.