குயின்ஸ்லாந்து மாநில லேபர் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிட்டானி லாகாமீதான பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான விசாரணைகளை குயின்ஸ்லாந்து பொலிஸார் முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.
9 மாதங்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த விசாரணையில், எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை.
குயின்ஸ்லாந்தில் உள்ள கடற்கரையில் கடந்த ஏப்ரல் மாதம் தனக்கு போதைப்பொருள் வழங்கப்பட்டு பாலியல் வன்கொடுமை இடம்பெற்றதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டி இருந்தார்.
மருத்துவ பரிசோதனையில் தனது உடலில் போதைப்பொருள் இருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது எனவும், தான் போதைப்பொருள் அருந்தவில்லை எனவும் அறிக்கையொன்றின் ஊடாக அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.
இரவுநேரங்களில் இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொண்ட சில பெண்கள் தன்னை அணுகியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய 9 மாதங்களாக விசாரணைகள் இடம்பெற்றுவந்தன.
இந்நிலையிலேயே இது தொடர்பில் எவர்மீதும் குற்றச்சாட்டை முன்வைக்கப்போவதில்லை என குயின்ஸ்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற வேறு சம்பவங்கள் பற்றி முறைப்பாடுகள் கிடைக்கப்பெறவில்லை, விசாரணை இடம்பெறவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.