சியாமளா யோகேஸ்வரன்
டிசெம்பரில் வருகின்ற நீண்ட கோடை விடுமுறை கழிந்து போக, அடுத்த விடுமுறைக்காகக் காத்திருப்பவர்களுக்கு, ஜனவரி மாதம் 26 ஆம் திகதியன்று வரும் அவுஸ்ரேலியா நாளானது மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு விடுமுறை தினமாகவே அமைகின்றது.
இந்த நாட்டின் பூர்வகுடிகளாக இருந்த போதும், சொந்த மண்ணுக்கான உரிமையை இழந்து, அத்துமீறிக் குடி வந்தவர்களிடம் தம் வாழ்வாதாரத்தை எதிர்பார்த்து, அவல நிலையில் வாழும் அவுஸ்ரேலிய நாட்டின் பூர்வகுடிகளுக்கு இந்த ஆக்கிரமிப்பு நாளானது துக்க நாளாகவே காணப்படுகின்றது. சொந்தமண் பறிபோன தினத்தை ஆண்டு தோறும் கொண்டாடும் போது, வேதனையான நினைவுகள் மீண்டும் கிளறப்படும் என்ற சிந்தனை பகுத்தறிவாளர்களுக்கு வராமற் போவது வேதனைக்குரியதொன்று.
உலகின் பழமையானதும், தொடர்ந்து வாழும் கலாசாரத்தின் பாதுகாவலர்களாகவும் காணப்படும் பூர்வகுடிகள் 60,000 ஆண்டுகளுக்கு மேல் அவுஸ்ரேலியாவைத் தங்களின் வதிவிடமாகக் கொண்டுள்ளனர். முதல் கப்பல் வந்த போது, இன்றைய அவுஸ்ரேலியா என அழைக்கப்படும் நிலத்தில் 500 க்கும் மேற்பட்ட பூர்வகுடிக் குழுக்களும், சுமார் 750,000 பேரும் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
பிரித்தானியரின் ஆளுமையாலும், பலத்தாலும் பூர்வ குடிச்சமுதாயங்கள் பாரம்பரிய மண்ணிலிருந்து அகற்றப்பட்டுக் காலனியாக்கம் நிகழ்த்தப்பட்டதில் பூர்வகுடிகளின் சனத்தொகையானது 1900 ஆம் ஆண்டளவில், 90% சதவீதத்தால் குறைக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டிருக்கின்றது.
கப்டன் குக் அவுஸ்ரேலியாவின் வடகுயின்ஸ்லாந்தில் ஏப்ரல் 1770 ஆம் ஆண்டு காலடி எடுத்து வைத்திருந்த போதும், 1788 ஆம் ஆண்டு, ஜனவரி 26 ஆம் திகதி ஆதர் பிலிப்ஸ் என்பவர் நியூ சவுத்வேல்ஸில் காலடி வைத்த நாளையே அவுஸ்ரேலிய நாள் என்று கொண்டாடுகின்றார்கள்.
கீழைத்தேய காலனித்துவ நாடுகள், பிரித்தானிய ஆக்கிரப்பின் கீழிருந்து சுதந்திரம் பெற்ற நாளை தமக்கான சுதந்திரமும், உரிமையும் கிடைத்த நாளாகக் கொண்டாடுவதில் அர்த்தமிருக்கின்றது. ஆனால் ஒரு இனத்தை அடிமையாக்கிய நாளை, சொல்லொணாத் துயரத்தின் பாதிப்பிலிருந்து இன்று வரையில் மீண்டு வராத ஒரு சமூகத்தின் அழிவு தொடங்கிய நாளை, முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்க வேண்டுமா?
அமெரிக்கப் பூர்வ குடிகளை அடக்கி, ஆக்கிரமித்த நாளை அமெரிக்காவோ அல்லது நியூசிலாந்தைப் பிரித்தானியர் ஆக்கிரமித்த நாளை நியூசிலாந்து நாட்டினரோ வெற்றிநாளாகக் கொண்டாடாத போது, அவுஸ்ரேலியா மட்டும் அந்த நாளை, வென்ற நாளாகக் கொண்டாடுவது தொடர் வாதத்துக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றது.
பல்லினங்களும் வந்தேறு குடிகளாக மகிழ்ச்சியாக வாழும் ஒரு தேசத்தில், இந்த மண்ணுக்குரியவர்களின் வேதனை தொடர்கதையாக நீண்டு கொண்டே செல்கின்றது. அவுஸ்ரேலிய நாளை மாற்ற எடுக்கும் முயற்சியானது, பூர்வகுடிகளுக்கும் மற்றைய அவுஸ்ரேலியர்களுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதற்கான ஆரம்ப முயற்சியாக அமையும் என்பது பெரும்பாலானாரின் கருத்தாக இருக்கின்றது.
சில நகரசபைகள் அவுஸ்ரேலிய நாளை இன்னொரு தினத்துக்கு மாற்றுவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியமானது அவுஸ்ரேலிய நாளுக்கான துடுப்பாட்டம் என்ற சொற்பதத்தை தவிர்த்து, அந்த விடுமுறை நாளுக்கான துடுப்பாட்ட விளம்பரத்தை மேற்கொண்டு வருகின்றது. அவுஸ்ரேலியக் குடிமக்களில் மூன்றில் ஒரு பாகத்தினர் அவுஸ்ரேலிய நாளை மாற்ற வேண்டும் என்றும், 56 சதவீதத்தினர் இவ்விடயம் தொடர்பில் ஆக்கபூர்வமான தீர்வுகளை எடுக்காமல், நாளை மட்டும் மாற்றுவதில் எந்தப் பயனுமில்லை என்றும் கூறியிருக்கின்றார்கள்.
இன்னமும் அவுஸ்ரேலிய மண்ணின் பூர்வகுடிகள் தமக்கான வசதிகளையும் உரிமைகளையும் சரிவரப் பெற்றுக் கொள்ளவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். அவுஸ்ரேலியாவின் கல்வி அமைப்பினால் கல்வியறிவைப் பெறுவதில் பூர்வகுடிமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பூர்வகுடிமக்களின் சனத்தொகையில் இரண்டு சதவீதமானவர்கள் மட்டுமே பட்டப்படிப்பையோ அல்லது அதற்கு மேலான கல்வித் தகுதியையோ பெற்றிருக்கின்றனர். பல்வேறு ஆய்வுகளின் படி பூர்வகுடியினரின் ஆரோக்கிய நிலையானது மற்றய அவுஸ்ரேலியர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதனால் மிக இளம் வயதில் இறப்பதற்கும், உடல்நலக்குறைவால் வாழ்க்கைத் தரம் குறைவடைவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளவர்களாகவே இருக்கின்றனர்.
குற்றவியல் தரவுகளின் படி, அவுஸ்ரேலிய மக்கள் தொகையில் குற்றமிழைக்கும் பூர்வகுடியினர் நாற்பதில் ஒருவராகவும், சிறையில் உள்ளவர்களில் ஐந்தில் ஒருவராகவும் இருக்கின்றனர். பூர்வகுடியினரின் சிறைக்குற்றவாளிகளின் விகிதமானது மற்றையவர்களை விட 15 மடங்கு அதிகமாக உள்ளது.
2023 ஆம் ஆண்டில், பூர்வகுடியினருக்கான சிறைத்தண்டனையானது 100,000 பேருக்கு 2,266 ஆக இருக்கும் போது, மற்றைய அவுஸ்ரேலியர்களுக்கு 100,000 பேருக்கு 149 என்ற விகிதமாக இருந்தது. 2024ம் ஆண்டுக்கான தரவுகளின் படி, சிறைச்சாலையில் இறந்த 104 பேர்களில் 80 பேர்கள் பூர்வகுடியினர் என்பதும் வருத்தத்தைத் தரும் தகவலாகவே இருக்கின்றது. பூர்வ குடியினரின் சமூகப்பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கை முறை நெறிப்படுத்தப்படாவிட்டால் அடிப்படைப் பிரச்சினைகள் என்றும் தீரப்போவதில்லை.
பூர்வகுடியினரின் வறுமை நிலையையும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களையும் வாழ்க்கைத்தரமானது பின் தங்கிய நிலையில் இருப்பதையுமே விசாரணைகளும், ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன. அதிகப்படியான வேலை இழப்பு, மோசமான உடல்நலகுறைவுகள், மற்ற அவுஸ்ரேலியர்களைவிட மிகக் குறைந்த வாழ்நாட்கள், பூர்வகுடியினரின் அதிக அளவிலான சிறைத்தண்டனைகள் போன்ற தொடரும் பிரச்சினைகளை நிகழ்காலப் பதிவுகள் கோடிட்டுக் காட்டியிருக்கின்றன.
பன்முகத்தன்மை கொண்ட அவுஸ்ரேலியாவில் பூர்வகுடிகள் துக்கமான நாளாக உணரப்படக்கூடிய ஒரு திகதியை எமது நாட்டின் தேசிய நாளாகக் கொண்டாடுவது பொருத்தமானதாகத் தெரியவில்லை.
தேசியச் சிக்கலாக விளங்கும் இந்தப்பிரச்சினையைச் சமாளிக்க அனைத்து நிலைகளிலும் அரசானது ஒருங்கிணைந்த முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கும் நிலையில், முரண்பாட்டைத் தவிர்த்து, இனங்களை ஒன்றிணைத்து சமத்துவத்தை வளர்க்கும் வகையில் வேறொரு தினத்தை அவுஸ்ரேலியாவின் தேசிய விடுமுறை தினமாகக் கொண்டாடுவதே சாலப்பொருத்தமானது.