ஆஸ்திரேலியாவில் இடம்பெறும் யூத வெறுப்பு சம்பவங்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அவ்வாறான செயல்களுக்கு தமது நாட்டில் இடமில்லை என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவோங் தெரிவித்துள்ளார்.
உலகையே நடுங்க வைத்த ஹிட்லரின் ’ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ்’ வதை முகாம் விடுதலையின் 80 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு போலந்தில் நடைபெறுகின்றது.
இந்நிகழ்வில் ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர், யூதரான சட்டமா அதிபர் மற்றும் யூத எதிர்ப்பு குழுவின் தூதவர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
குறித்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் பேனி வோங் ஆஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது என எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தி இருந்த நிலையிலேயே அவர் பங்கேற்றுள்ளார்.
சிட்னி மற்றும் மெல்பேர்ணில் ஜெப ஆலயங்கள்மீதான தாக்குதல்கள், சிறார் பராமரிப்பு நிலையம் தீ வைப்பு உள்ளிட்ட யூத எதிர்ப்பு அலை ஆஸ்திரேலியாவில் தலைதூக்கியுள்ள நிலையிலேயே, அவ்வாறான சம்பவங்களை அனைத்து வழிகளிலும் கண்டிக்கின்றோம் என வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
யூத எதிர்ப்பு தாக்குதல்களை எதிர்த்து லேபர் அரசாங்கம் போராடிவருகின்றது எனவும், இதற்காக அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஓரணியில் திரள்வோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இந்த அறைகூவலை விடுத்துள்ளார்.