வடமேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதியில் காணப்படும் உலகின் மிகப் பழமையான விண்கல் பள்ளத்தை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு ஆய்வின் அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வாழ்க்கையின் தோற்றம் மற்றும் பூமியைப் பற்றிய புரிதலை மறுவடிவமைக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் எதிர்வு கூறுகின்றனர்.
இந்தப் பள்ளம், "நமது கிரகத்தின் பண்டைய வரலாறு குறித்த முந்தைய அனுமானங்களை கணிசமாக சவால் செய்தது" என்று கர்டின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குழு வட துருவத்தில் உள்ள வட்டவடிவ பாறை அடுக்குகளை ஆராய்ந்து "3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய விண்கல் தாக்கத்திற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தது".
"எங்கள் கண்டுபிடிப்புக்கு முன்பு, மிகப் பழமையான தாக்கப் பள்ளம் 2.2 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று அறியப்பட்டது. எனவே இது பூமியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான பள்ளம்" என்று ஆய்வு இணை-தலைமைப் பேராசிரியர் டிம் ஜான்சன் கூறினார்.
இணை-தலைமை ஆசிரியரான பேராசிரியர் கிறிஸ் கிர்க்லேண்ட், இந்த கண்டுபிடிப்பு பூமியின் ஆரம்பகால சூழலை விண்கற்கள் எவ்வாறு வடிவமைத்தன என்பது குறித்து புதிய வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது என்றார்.
"இந்த தாக்கத்தை வெளிக்கொணர்வதும், அதே காலகட்டத்தில் இருந்து மேலும் கண்டுபிடிப்பதும், உயிர் எவ்வாறு தொடங்கப்பட்டிருக்கலாம் என்பது பற்றி நிறைய விளக்கக்கூடும், ஏனெனில் விண்வெளித் தாக்க பள்ளங்கள் சூடான நீர் குளங்கள் போன்ற நுண்ணுயிர் வாழ்க்கைக்கு உகந்த சூழல்களை உருவாக்கியது," என்று கிர்க்லேண்ட் கூறினார்.
இந்த விண்கல் மணிக்கு 36,000 கிலோமீட்டர் (22,000 மைல்) வேகத்தில் அந்தப் பகுதியில் மோதியதாகக் கருதப்படுகிறது, இதன் விளைவாக 100 கிலோமீட்டருக்கும் அதிகமான அகலமுள்ள ஒரு பள்ளம் உருவாகி, உலகம் முழுவதும் குப்பைகள் பறந்திருக்கலாம் என்று ஆய்வு மேலும் கூறியது.
சபா.தயாபரன்