மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இரு தினங்களில் மாத்திரம் பொதுமக்கள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இது அந்த நாட்டு வரலாற்றில் மோசமான உள்நாட்டு வன்முறை சம்பவங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஆசாதுக்கு ஆதரவாக இருந்த அலவைட் சிறுபான்மை பிரிவினருக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை அன்று அந்த நாட்டின் தற்போதைய அரசு ஆதரவாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தியது இந்த கலவரத்துக்கு காரணமாக அமைந்துள்ளது எனக் கூறப்படுகின்றது.
இதற்கு பதில் தாக்குதலை ஆசாத் ஆதரவாளர்கள் கொடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் துருக்கி ஆதரவு பெற்ற ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் கிளர்ச்சி படை சிரியாவை கைப்பற்றியது. அதையடுத்து ஜனாதிபதியாக இருந்த ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பினார்.
இரு தரப்புக்கும் இடையே இரண்டு நாட்களாக நடந்த மோதலில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 745 பேர் பொதுமக்கள், 125 பேர் பாதுகாப்பு படையினர், 148 பேர் ஆசாத் ஆதரவாளர்கள் என்பதை சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உறுதி செய்துள்ளது.
சிரியாவில் ஷியா பிரிவை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி ஆசாத்துக்கும் சன்னி பிரிவை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே சுமார் 14 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது.