தற்காலிக போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயாராக உள்ளது எனவும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் இதற்கு சம்மதிப்பார் என நம்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உக்ரைன் அரசு 30 நாள்கள் போர் நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாகக் கூறியது.
இதனைத் தொடர்ந்தே ட்ரம்ப்பின் அறிக்கையும் வெளியாகியுள்ளது.
“ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறும் போரின் காரணமாக இரு தரப்பிலும் இராணுவத்தினர், பொதுமக்கள் என உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இது நிறுத்தப்பட வேண்டும். அதற்கு தற்காலிக போர் நிறுத்தம் மிகவும் அவசியம்." என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, உக்ரைன்மீது ரஷ்யா தொடுத்துள்ள சட்டவிரோத போர் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என ஆஸ்திரேலியா வலியுறுத்திவருகின்றது.
அத்துடன், உக்ரைனில் நிரந்தர அமைதிக்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவளிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.