உள்நாட்டு உற்பத்தி பொருள்களை வாங்குவதற்கு ஆஸ்திரேலியர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
எஃகு மற்றும் அலுமினியம்மீது அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரியை விதித்துள்ளது. இந்த வரியிலிருந்து கன்பராவுக்கு வாஷிங்டன் விலக்களிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடக்கவில்லை.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தொடர்பில் ஆஸ்திரேலிய பிரதமர் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உள்நாட்டு உற்பத்திகள் வாங்குவதை நாட்டு மக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என பிரதமர் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பாதீடு எதிர்வரும் 25 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளது. இதில் உள்நாட்டு உற்பத்திகளை வாங்குவதற்கு மக்களை ஊக்குவிப்பதற்குரிய திட்டங்கள் உள்ளடக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு மக்கள் கூடுதல் ஆர்வம் காட்ட வேண்டும் எனவும், அதன்மூலம் புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என ஆஸ்திரேலிய பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வரி விதிப்பையடுத்து கனடா மக்கள் உள்நாட்டு உற்பத்திகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். இதற்கு மக்களும் ஊக்குவிக்கப்படுகின்றனர். எனவே,ஆஸ்திரேலியாவும் இந்த வழிமுறையை பின்பற்றுமா என எழுப்பட்ட கேள்விக்கே, உள்நாட்டு உற்பத்திகளை கொள்வனவு செய்யுமாறு மக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.