வாடகைக்கு வழங்கிய வீட்டில் அனுமதியின்றி பல தடவைகள் நுழைந்த வீட்டு உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்ண் புறநகர் பகுதியான பரஹ்ரானில் உள்ள வீட்டிக்கே 15 மாதங்களில் 29 தடவைகள் அவர் சென்றுவந்துள்ளார். சில சமயங்களில் ஒரு வாரத்துக்குள் வீட்டுக்குள் அவர் நான்கு தடவைகள்கூட சென்றுவந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
விக்டோரியாவில், வீட்டு உரிமையாளர் ஒருவர், வீட்டை வாடகைக்கு வழங்கி இருந்தால், ஆறு மாதங்களுக்கு ஒரு தடவையே பொது ஆய்வுக்காக வீட்டில் சட்டப்பூர்வமாக நுழைய முடியும்.
இந்நிலையிலேயே வீட்டு வளாகத்துக்குள் தேவையற்ற மற்றும் அதிகப்படியான நுழைவுகள் காரணமாக வீட்டு உரிமையாளருக்கு எதிராக வாடகைதாரர், விக்டோரியா சிவில் மற்றும் நிர்வாக தீர்ப்பாயத்தில் முறைப்பாடு செய்தார்.
சட்டவிரோதமாக நுழைந்த சந்தர்ப்பங்களும் முறைப்பாட்டாளரால் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், இழப்பீடாக 10 ஆயிரம் டொலர்களை கோரியுள்ளார்.
29 சந்தர்ப்பங்களில் ஆறு தடவைகள் மட்டுமே வீட்டு உரிமையாளர் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார் என தீர்ப்பாயம் கண்டறிந்து, ஆயிரத்து 106 டொலர்களை இழப்பீடாக வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.