ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமும், அமைச்சர்களும் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (20.01.2020) நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கையில் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ முறைமை இருக்கின்றது. அத்துறையில் தேர்ச்சிபெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த ஆயுர்வேத வைத்தியர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை தம்மால் குணப்படுத்த முடியும் என பதிவுசெய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்தனர்.எனினும், அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. மேற்கத்தேய மருத்துவம்தான் இதற்கு சரி என்ற நிலைப்பாட்டில் அரசு இருந்தது.
ஆனால் ஆருடம்கூறும் ஒருவர் திடீரென பானியொன்றை தயாரித்தார். அதனை ஆட்சியாளர்கள் தூக்கிபிடித்தனர். சுகாதார அமைச்சர்கூட அந்த பானியை பகிரங்கமாக பருகினார். இது தவறான அணுகுமுறையாகும். எவராவது மருந்து கண்டுபிடித்திருந்தால் அதனை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சுகாதார அமைச்சர் அனுப்பியிருக்கவேண்டும். அறிக்கை கோரியிருக்க வேண்டும். அதனை விடுத்து சுவை பார்த்து ‘சுப்பர்’ என விழிகளில் சைகை காட்டுவது சுகாதார அமைச்சருக்கு பொருத்தமான நடவடிக்கையாக அமையாது. பொறுப்புடன் செயற்படவேண்டிய சுகாதார அமைச்சர் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவது வேதனைக்குரிய விடயமாகும். இறுதியில் கொரோனா பானி அருந்திய இராஜாங்க அமைச்சருக்கும் கொரோனா தொற்றியுள்ளது.
அடுத்ததாக மரண தண்டனை கைதியொருவர் எம்.பியாக பதவியேற்கும் நாளில் மக்களை திசை திருப்பும் நோக்கில் மாடறுப்பு தடை செய்யப்படும் என பிரதமர் அறிவிப்பு விடுத்தார். அதன்பின்னர் அமைச்சரவையில் ஆராயப்படும் எனக் கூறப்பட்டது. இது விடயத்தில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. பிரதமரின் அறிவிப்பு என்பது அரசின் கொள்கையாக அமையவேண்டும். ஆனால் இது விடயத்தில் என்ன நடந்தத?
தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஆக இந்த அரசாங்கமும், அமைச்சர்களும் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றனர்.” – என்றார்.