இனப்படுகொலை நடந்த பின்னர் 13 ஆவது திருத்தச் சட்டத்தை கோருவது எந்த வகையில் நியாயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
வவுனியாயில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
13 ஆவது திருத்தம் என்பது 1987 ஆம் ஆண்டே அடியோடு நிராகரிக்கப்பட்ட ஒரு ஆவணம். 13 ஆவது திருத்தமும் மாகாண சபை சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட போது இன்றைக்கு கூட்டமைப்பின் தலைவர் என சொல்லிக் கொண்டிருக்கும் சம்பந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் சிவசிதம்பரம் , அமிர்தலிங்கம் ஆகிய மூன்று பேரும் இணைந்து இந்த 13 ஆவது திருத்த வரைபை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாது தடுத்து நிறுத்துங்கள் என ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதினார்கள். அது ஒரு ஆரம்ப புள்ளியாக கூட கருத முடியாது என்பதால் அப்போது நிறுத்தக் கோரினார்கள்.
34 வருடங்களுக்கு முதல் நிராகரிக்கப்பட்டதை இன்று மீண்டும் கொண்டு வர முயல்கிறார்கள். அன்று ஏற்பட்டிருந்த இழப்புகளுடன் ஒப்பிடுகையில் அப்போது இழப்பு குறைவாக இருந்தது. இன்று இன அழிப்பு நடந்த பின்னர் அதனை நடைமுறைப்படுத்த கோருவதில் என்ன நியாயம் இருகின்றது. போர் முடிந்த கையுடன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை வந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்து 2009 மே மாதம் 21 ஆம் திகதி 13 வது திருத்தச் சட்டத்தை தீர்வாக ஏற்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள்.
அதனையே இன்று நிறைவேற்ற முயலுகிறார்கள். இது நடக்கும் என்று தெரிந்தமையால் நாம் கூட்டமைப்பில் இருந்து விலகி மக்களுக்கு இதனை தெரியப்படுத்தி வந்தோம். 11 வருடங்களாக சுட்டிக் காட்டி வந்த விடயம் இன்று நடந்து கொண்டு இருக்கிறது. அதனால் தான் நாம் இதனை எதிர்க்கிறோம்.
தமிழ் தேசிய மக்கள் முன்னனி 11 வருடமாக செய்து வந்த அடிப்படையே 13 ஆவது திருத்தம் ஒற்றையாட்சிக்கு உட்பட்டது என்பதுவே. அதனால் இதனை எப்படி நாம் தமிழர் நலன்சார்ந்து எதிர்க்காமல் இருக்க முடியும் என அவர் தெரிவித்தார்.