others

” தமிழர்களுக்கு இன்னும் சம உரிமை கிடைக்கவில்லை”

வடக்கில் உள்ள தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலின்போது பொதுவேட்பாளரை நிறுத்தக்கூடாது என்பதற்காக 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் உறுதிமொழி எதையும் வழங்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு இன்னும் சம உரிமைகள் கிடைக்கப்பெறவில்லை என்பதை ஏற்றாக வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், ஒற்றையாட்சிக்குள்தான் 13 அமுல்படுத்தப்படும் எனவும் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ தெற்கில் உள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் அனுபவிக்கும் சம உரிமைகள் தமிழர்களுக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பதை நாம் ஏற்க வேண்டும். அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, கல்வி, விளையாட்டு என எதை எடுத்தாலும் சம உரிமை கிடைக்கப்பெறவில்லை.

ஒற்றையாட்சிக்குள் இறையாண்மை, ஆட்புல ஒருமைப்பாடு, அரச பாதுகாப்பு என்பவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 13 ஆவது திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்படும்.

இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இலங்கை பிரஜைகள். அனைவருக்கும் முதல்தர கவனிப்பு இருக்க வேண்டும். எவரும் இரண்டாந்தர பிரஜைகள் அல்லர்.

அதேவேளை, பொது வேட்பாளரை தமிழ்க் கட்சிகள் களமிறக்ககூடாது என்பதற்காக 13 குறித்த உறுதிமொழி வழங்கப்படவில்லை. 13 ஐ அமுல்படுத்துகின்றோம், ஆதரவு தாருங்கள் எனவும் கோரப்படவில்லை. அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் என்பது அரசமைப்பில் உள்ள விடயமாகும். அது அமுல்படுத்தப்படும் என்றே கூறப்பட்டுள்ளது.” – என்றார்.

Related Articles

Back to top button