others

குழந்தைகள் காப்பாற்றப்படுவதை தடுத்த தந்தைமீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைப்பு

வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது தனது குடும்பத்தார் காப்பாற்றப்படுவதை தடுத்தார் எனக் கூறப்படும் தந்தைமீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிட்னி மேற்கு பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று சிறார்கள் பலியாகினர். தாயும், மேலும் மூன்று சிறார்களும் எரிகாயங்களுக்கு உள்ளாகினர். அவர்கள் வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

வீடு பற்றி எரிந்தபோது குடும்பத்தார் காப்பாற்றப்படுவதை அவர்களின் தந்தை தடுத்துள்ளார். அயலவர்களும், தீயணைப்பு படையினரும் வீட்டுக்குள் செல்வதை தடுக்க முற்பட்டுள்ளார். அவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட 28 வயதான தந்தை நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அவர் பொலிஸ் பாதுகாப்பின்கீழ் தொடர்ந்து சிகிச்சைபெற்றுவருகின்றார்.
குறித்த நபர்மீது குடும்ப வன்முறை மற்றும் கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பிணை கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. எனினும், வழக்கு விசாரணையை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன், குறித்த தந்தை தனது குடும்ப உறுப்பினர்களை தொடர்புகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் செல்ல முடியாது.
செப்டம்பர் 6 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.

Related Articles

Back to top button