AustraliaCommunitySports

ஆஸி. மண்ணில் உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது ஸ்பெயின்

மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இறுதி ஆட்டம் சிட்னியில் நேற்றிரவு 75 ஆயிரம் இரசிகர்களின் முன்னிலையில் அரங்கேறியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஸ்பெயினின் கையே சுற்று ஓங்கி இருந்தது. 16-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை லாரென் ஹெம்ப் அடித்த சூப்பரான ஷாட் கம்பத்தில் பட்டு நழுவியது.

18-வது நிமிடத்தில் ஸ்பெயினின் அல்பா ரிடோன்டோ அடித்த ஷாட்டை இங்கிலாந்து கோல் கீப்பர் மேரி எர்ப்ஸ் தடுத்து நிறுத்தினார். 29-வது நிமிடத்தில் ஸ்பெயின் தலைவர் ஒல்கா கர்மோனா, சக வீராங்கனை கால்டென்டி தட்டிக்கொடுத்த பந்தை அழகாக கோலுக்குள் திருப்பி அசத்தினார். பதிலடி கொடுக்க இங்கிலாந்து கடுமையாக போராடியது. ஆனால் கச்சிதமான வியூகங்களுடன் பிணைக்கப்பட்ட ஸ்பெயினின் பாதுகாப்பு வளையத்தை இங்கிலாந்து வீராங்கனைகளால் உடைக்க முடியவில்லை.

49-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை கால்டென்டி இலக்கை நோக்கி அடித்த பந்தை ஸ்பெயின் கோல் கீப்பர் கேட்டா கால் பாய்ந்து விழுந்து வெளியே தள்ளினார்.

68-வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு மேலும் ஒரு கோல் போட சந்தர்ப்பம் கனிந்தது. கோல் பகுதியில் வைத்து பந்தை இங்கிலாந்து வீராங்கனை கெய்ரா வால்ஷ் கையால் தடுத்ததால் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த பொன்னான வாய்ப்பை ஸ்பெயின் வீராங்கனை ஜெனிபர் ஹெர்மோசா வீணடித்தார். அவர் பெனால்டியில் உதைத்த பந்தை இங்கிலாந்து கோல் கீப்பர் மேரி எர்ப்ஸ் துல்லியமாக தடுத்து தங்கள் அணியை காப்பாற்றினார்.

இதன் பின்னர் ஸ்பெயின் வீராங்கனைகள் அடுத்தடுத்து கோல் கம்பத்தை முற்றுகையிட்டு இங்கிலாந்தை நெருக்கடிக்குள்ளாக்கினர். பந்தை தங்களது கட்டுப்பாட்டில் அதிக நேரம் (58 சதவீதம்) வைத்திருந்த ஸ்பெயின் வீராங்கனைகள் இறுதி கட்டத்தில் தடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தினர். கடைசி நிமிடத்தில் இங்கிலாந்தின் கார்னர் ஷாட்டை ஸ்பெயின் கோல்கீப்பர் பிடித்ததுடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

முடிவில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தின் கனவை சிதைத்து முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது.

கடந்த ஆண்டு 17 வயதுக்குட்பட்டோர், 20 வயதுக்குட்டோபர் உலகக் கோப்பையை சொந்தமாக்கிய ஸ்பெயின் இப்போது சீனியர் பட்டத்தையும் வென்று விட்டது. ஒரே காலக்கட்டத்தில் இந்த பட்டத்தையும் சுவைத்த முதல் அணி ஸ்பெயின் தான்.

கால்பந்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக் கோப்பை இரண்டையும் கைப்பற்றிய 2-வது அணி என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றது. ஏற்கனவே ஜெர்மனி இச்சாதனையை செய்துள்ளது. ஆண்கள் உலகக் கோப்பை கால்பந்தில் 2010-ம் ஆண்டு ஸ்பெயின் பட்டத்தை வென்று சாதித்தது. அப்போது ஸ்பெயின் அணி குரூப் பிரிவில் ஒரு ஆட்டத்தில் தோற்ற பிறகே எழுச்சியுடன் முன்னேறி இறுதி ஆட்டத்தில் ஒரு கோல் போட்டு கோப்பையை கையில் ஏந்தியது. இதே போல் தான் இப்போது பெண்கள் உலகக் கோப்பை தொடரில் ஸ்பெயினுக்கு நிகழ்ந்துள்ளது.

Related Articles

Back to top button