“போரை முடிவுக்குக் கொண்டுவந்த மஹிந்த ராஜபக்சவின் மனைவி மற்றும் மகன் ஆகியோரைக் கைது செய்து, தமிழ் பிரிவினைவாத டயஸ்போராவைத் திருப்திப்படுத்தும் செயலை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் 'மொட்டு' கட்சியின் தலைமையகத்தில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:
“முஸ்லிம் அடிப்படைவாதிகள் குறித்து ஞானசார தேரரே முதன்முதலில் கருத்துகளை வெளியிட்டிருந்தார். அன்று அவர் கூறியதைச் செவிமடுத்து, உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் நடந்திருக்காது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் துறவற ஆடை (காவி உடை) அகற்றப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமான ஒரு நடவடிக்கையாகும்.
கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற பாரதூரமான குற்றச்சாட்டுகள் எதுவும் அவருக்கு எதிராக இல்லை. எனவே, அதிகாரிகளால் அவரின் துறவற ஆடைகளைக் தன்னிச்சையாக அகற்ற முடியாது; அதற்குரிய தனியான நடைமுறைகள் உள்ளன.
ஞானசார தேரரின் துறவற ஆடை அகற்றப்பட்ட விவகாரம் பௌத்த மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரத்தைத் திசைதிருப்பவே ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதலே தமிழ் பிரிவினைவாத டயஸ்போராவைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகிறது.
போரை முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்திய மஹிந்த ராஜபக்ச ஷவின் மனைவி மற்றும் மகன் ஆகியோரைச் சிறையில் அடைத்து இந்த அரசாங்கம் தமிழ் பிரிவினைவாத டயஸ்போராவைத் திருப்திப்படுத்துகிறது. இதற்கு எதிராக மக்கள் விரைவில் கிளர்ந்தெழுவார்கள்.” - என்றார் சரத்வீரசேகர.