சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்ட விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரையின் பேரில் இன்று (08) விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
மூன்று நிக்காயாக்களின் மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையே இன்று (08) நண்பகல் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவின்படி இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் பியுமந்தி பீரிஸ், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்த ஆரியரத்ன, பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜி. சேனாரத்ன,
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஒருவரான ஏ.சி. கஜநாயக்க ஆகியோர் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் சட்ட விதிகள் மற்றும் அக் கட்டளைச் சட்டத்தின் மூலம் விதிக்கப்பட்ட நிலையான கட்டளைகளைக் காலத்திற்கேற்ப மீளாய்வு செய்வதும், தற்கால சமய, கலாசார, சட்டரீதியான, நிர்வாக மற்றும் நடைமுறைத் தேவைகளுக்கு ஏற்ப புதுப்பிப்பதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை கட்டமைப்பின் செயற்திறன், சிறந்த நிர்வாகம், பாதுகாப்பு, கலாசார விழுமியங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்குத் தேவையான திருத்தங்களைக் கண்டறிந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் பொறுப்பு இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.